தக்கலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள்.. மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேரில் ஆய்வு !
Development project works in the Thakkalai Panchayat Union areas District Collector Alagumina conducted an onsite inspection
தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனாசெய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைகளுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்ல வீடுகள் கட்டபட்டு வருகின்றன.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சடையமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞரின் கனவு இல்லத்திட்டம் (KKI) 2024-25 கீழ் தலா ரூ.3.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 2 வீடுகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது பூச்சு வேலைகள் நடைபெறவுள்ளது. தொடர்ந்து கல்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டத்தின் கீழ் ரூ.2.40 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணிகளை தரமானதாகவும், உறுதித்தன்மையுடன் அமைத்திடவும், மூன்று மாதங்களுக்குள் பணிகளை முடிக்க வீட்டின் பயனாளிகள் மற்றும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் சடையமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் ரூ.7.56 இலட்சம் மதிப்பில் அரசு நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் சமையல் கூடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, பள்ளி ஜீன் மாதம் திறக்கப்படும் எனவே சமையல் கூட பூச்சு வேலைகளை மே மாத இறுதிக்குள் முடிக்க துறை சார்ந்த அலுவலர்க்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் GTM நர்சரி பார்வையிடப்பட்டது. மேலும் ஆரல்வாய்மொழி வனத்துறை நர்சரிலிருந்து பலனுள்ள தேக்கு மரக்கன்றுகள் வாங்கி வளர்க்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் இங்கு வளர்க்கப்படும் மரங்களை கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் சாலை ஓரங்களில் நடவு செய்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தக்கலை ஊராட்சி ஒன்றியம் சடையமங்கலம் ஊராட்சி பகுதியில் தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் செயல்படும் ஆயத்த ஆடை அலகு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, நவீன தையல் இயந்திரங்கள், பிரின்டிங் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறியப்பட்டது. பள்ளி சீருடைகள் தைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அலுவலகத்திலிருந்த சீருடை தைப்பதற்கு துணிகள் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்களிடம் சமூகநல அலுவலரிடம் மேற்படி துணிகள் வழங்க ஆவனம் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நாப்கின் அலகு பார்வையிடப்பட்டதோடு, அதிக அளவு உற்பத்தியை அதிகரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மகளிர் திட்ட இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து ஊரக பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, தற்போது சீரமைக்க முடியாமல் மிகவும் பழுதடைந்த வீடுகளை ஊரக வீடுகள் பழுதுநீக்கல் திட்டத்தின் கீழ் 5 வீடுகள் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் முத்தலக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சாஸ்தான் குளம் தூர்வாரும் பணிகள் நேரில் பார்வையிட்டதோடு, குளத்தினை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்துமாறும், தூர்வாரும் பணிகளை இரண்டு வாரத்திற்குள் முடிக்கவும் துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
சடையமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை கூடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மக்கும் குப்பை மக்கா குப்பைகள் என உரிய முறையில் தரம் பிரித்து, உரம் தயாரிப்பதையும், மண்புழு மற்றும் உயிர் உரம் தயாரிப்பதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளபட்டது. மேலும் உரங்களை தயாரித்து பேக்கிங் செய்து, திடக்கழிவு மேலாண்மை மையத்தின் முன்புறம் வைத்து விற்பனை செய்ய வும துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.நடைபெற்ற ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, செயற்பொறியாளர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமலதா.சாந்தி, பொறியாளர் சஞ்சு பொன்ராஜன், பணியாளர்கள், பயனாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
English Summary
Development project works in the Thakkalai Panchayat Union areas District Collector Alagumina conducted an onsite inspection