இலக்கிய உலகை சோகத்தில் ஆழ்த்திய மறைவு...! பிரபல தமிழறிஞர் சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக காலமானார்...!
death that saddened literary world Famous Tamil scholar Solomon Papaiah passed away due to old age
தமிழகத்தின் பட்டிமன்ற மேடைகளில் தனது தனித்துவமான பேச்சாற்றலால் முத்திரை பதித்து, தமிழறிஞராகவும் பேராசிரியராகவும் தமிழ் மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்ற சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90.மதுரையைச் சேர்ந்த சாலமன் பாப்பையா, பட்டிமன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக தமிழகம் முழுவதும் அறிமுகமானவர். நகைச்சுவை கலந்த பேச்சு, ஆழமான தமிழ் அறிவு, இலக்கியங்களை எளிமையாக எடுத்துரைக்கும் பாங்கு ஆகியவற்றால் தலைமுறை தலைமுறையாக ரசிகர்களை ஈர்த்தார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய சாலமன் பாப்பையா, தமிழ் இலக்கியங்கள் குறித்த தனது உரைகளாலும் பரவலான வரவேற்பைப் பெற்றார்.திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ள அவர், தமிழ் மொழியின் சிறப்பையும், இலக்கியங்களின் ஆழத்தையும் எளிய நடையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் முக்கிய பங்கு வகித்தார்.
தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 2000-ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கியது.தொடர்ந்து, தமிழுக்கு அவர் செய்த சிறப்பான பணிகளைப் பாராட்டி மத்திய அரசு 2021-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.பட்டிமன்றம் மற்றும் இலக்கிய மேடைகளில் மட்டுமின்றி திரைத்துறையிலும் சாலமன் பாப்பையா தனது பங்களிப்பை பதிவு செய்துள்ளார்.
‘பாய்ஸ்’, ‘சிவாஜி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.அவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.கடந்த சில காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சாலமன் பாப்பையா, வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
பட்டிமன்ற மேடைகளில் தமிழை சுவைபட முழங்கச் செய்த அவரது மறைவு தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய உலகினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
death that saddened literary world Famous Tamil scholar Solomon Papaiah passed away due to old age