போக்குவரத்து நெரிசல் மற்றும் இடப்பற்றாக்குறை ஏற்படும்...! - பட்டினப்பாக்கம் திட்டத்திற்கு வானதி சீனிவாசன் எதிர்ப்பு...!
Traffic congestion and lack space occur Vanathi Srinivasan opposes Pattinapakkam project
சென்னையின் தற்போதைய போக்குவரத்து நெரிசல் மற்றும் இடப்பற்றாக்குறையை கருத்தில் கொள்ளாமல் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைத்தால், இன்னும் 10 ஆண்டுகளில் மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு புதிய இடத்தை தேடும் சூழல் உருவாகும் என பா.ஜ.க. முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னைக்கு அருகே குறைந்தது 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றம் உள்ளிட்ட அரசு நிர்வாகத்திற்கான அனைத்து கட்டமைப்புகளையும் உள்ளடக்கிய புதிய நகரத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பட்டினப்பாக்கத்தில் 25.55 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பில் தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றம் கட்டப்படும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ள வானதி சீனிவாசன், இத்தகைய மிகப்பெரிய திட்டங்களை அறிவிப்பதற்கு முன்பு, இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் நிலை மற்றும் எதிர்காலத் தேவைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அவசரமாக தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றம் அமைக்கப்பட்டதாகவும், அதன் தற்போதைய நிலை அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தலைமைச் செயலகம் என்பது ஒரு அரசு அலுவலகம் மட்டுமல்ல; அது ஒரு மாநிலத்தின் நிர்வாக அடையாளமாகவும் திகழ்கிறது.
எனவே, புதிதாக தலைமைச் செயலகம் அமைக்கப்படும்போது, அடுத்த பல தலைமுறைகளுக்கும் பயன்படும் வகையில் போதுமான நிலப்பரப்பிலும், எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்ற இடத்திலும் அமைக்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இடப்பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் தீவிரமடையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பட்டினப்பாக்கத்தை இணைக்கும் சாந்தோம் நெடுஞ்சாலை ஏற்கனவே குறுகலாக இருப்பதால், அதனை விரிவுபடுத்துவது எளிதான காரியம் அல்ல என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல், கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து கடற்கரை வழியாக பட்டினப்பாக்கம் செல்லும் சாலையை அகலப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், அப்பகுதியில் வசிக்கும் மீனவர் குடியிருப்புகளை அகற்ற வேண்டிய சூழல் உருவாகும் என்றும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, சென்னைக்கு அருகே குறைந்தது 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தலைமைச் செயலகம், சட்டமன்றம், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை இடம்பெறும் வகையில் புதிய நகரத்தை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும், அந்தப் புதிய நகரில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், மெட்ரோ ரெயில் வசதி, அகலமான பல அடுக்கு சாலைகள் உள்ளிட்ட நவீன கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுவே தலைநகர் நிர்வாகத்திற்கான நீண்டகால தீர்வாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றம் அமைப்பதற்கான இடத்தை முதலில் முறையாகத் தேர்வு செய்து, அதன்பின்னர் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடல் நடத்த வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.அவ்வாறு தொலைநோக்குடன் திட்டமிட்டு உருவாக்கப்படும் தலைமைச் செயலகமும் சட்டமன்றமும் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்பதுடன், தமிழ், தமிழர் மற்றும் தமிழ்நாட்டின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாறாக, தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் அவசரமாக முடிவெடுத்து, போதிய இடவசதி இல்லாத பகுதியில் தலைமைச் செயலகத்தை அமைத்தால், எதிர்காலத்தில் மீண்டும் இடமாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.இடநெருக்கடி, அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளால் இன்னும் 10 ஆண்டுகளில் தலைமைச் செயலகத்திற்கு புதிய இடத்தை தேடும் நிலை உருவாகக்கூடும்.
எனவே, எதிர்காலத் தேவைகளை முன்கூட்டியே கணித்து, தொலைநோக்குப் பார்வையுடன் முதல்-அமைச்சர் செயல்பட வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Traffic congestion and lack space occur Vanathi Srinivasan opposes Pattinapakkam project