சட்டம்-ஒழுங்கை பலப்படுத்த காவலர்களின் அதிரடி நடவடிக்கை...! - ஒரே இரவில் சிக்கிய 70 குற்றவாளிகள்...!
Police take drastic action strengthen law and order 70 criminals caught one night
சென்னை திருவொற்றியூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலை சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்த காவலர்கள் அதிரடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
குறிப்பாக, ரவுடிகள் மற்றும் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கண்டறிந்து கைது செய்யும் பணியில் காவலர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்ற அதிரடி சோதனையில் சுமார் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் ரவுடிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம், குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை காவலர்கள் தீவிரமாக கண்காணித்து, பல்வேறு இடங்களில் சோதனைகளை நடத்தினர்.
இதையடுத்து, குற்றப்பின்னணி கொண்ட பலரை காவலர்கள் சுற்றிவளைத்து கைது செய்தனர். குறிப்பாக, தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் மற்றும் வழக்குகளில் தொடர்புடையவர்களை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்ற வழக்குகளில் தொடர்புடையதுடன், நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தும் ஆஜராகாமல் இருந்து வந்தவர்களையும் காவலர்கள் தேடி கைது செய்து வருகின்றனர்.
சென்னையில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலை சம்பவங்களின் பின்னணியில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், ரவுடிகள் மற்றும் குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு எதிரான இந்த அதிரடி நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.kசென்னையின் முக்கிய பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு, குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவலர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Police take drastic action strengthen law and order 70 criminals caught one night