சென்னை பெரம்பூரில் அதிரடி...! ரெயில் மூலம் கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சா பறிமுதல்...! - நேபாள நாட்டைச் சேர்ந்த 2 பேர் கைது...!
Action Chennai Perambur 7 kg ganja smuggled by train seized 2 people from Nepal arrested
வடமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே காவலர்கள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். போதைப்பொருளை கடத்தி வந்ததாக நேபாள நாட்டைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமாநிலங்களில் இருந்து ரெயில்கள் வழியாக சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு போதைப்பொருட்கள் தொடர்ந்து கடத்தி வரப்படுவதாக பெருநகர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தகவலின் அடிப்படையில் இன்று (வெள்ளிக்கிழமை) குறிப்பிட்ட பகுதிகளில் காவலர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டதுடன், சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் சோதனையும் நடத்தினர்.

அப்போது பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே 2 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்ததை காவலர்கள் கவனித்தனர். அவர்களை அழைத்து விசாரணை நடத்தியதுடன், அவர்கள் வைத்திருந்த பைகளையும் சோதனையிட்டனர்.அந்தச் சோதனையில், பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கஞ்சா பொட்டலங்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர்கள் நேபாள நாட்டைச் சேர்ந்த ககன் பகதூர் மற்றும் டேனியல் கஸ்கார் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவலர்கள் கைது செய்தனர்.
விசாரணையில், வடமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்ததும், இங்கு உள்ள உள்ளூர் முகவர்களிடம் அதனை ஒப்படைத்து விநியோகம் செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.இந்தக் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார், கஞ்சாவை சென்னையில் யாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டது, இதற்கு மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய முக்கிய நபர்களை கண்டறியும் பணியிலும் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Action Chennai Perambur 7 kg ganja smuggled by train seized 2 people from Nepal arrested