மருந்து கலந்த களியை உண்ட 'பாகுபலி' யானை...! உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும் வனத்துறையினர்...!
Baahubali elephant eats medicated clay Forest officials continue monitor health
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே காயத்துடன் சுற்றித்திரிந்த பிரபல காட்டுயானை பாகுபலிக்கு, வனத்துறையினர் மருந்து கலந்த களி உருண்டைகளை வழங்கி சிகிச்சை அளித்தனர். யானையின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ள வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிறுமுகை வனச்சரகத்தைச் சேர்ந்த வனப்பணியாளர்கள் வேடர் காலனி பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனப்பகுதியில் இருந்து பாகுபலி யானை வெளியேறி வந்ததை அவர்கள் கவனித்தனர்.அந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பும் பணியில் வனப்பணியாளர்கள் ஈடுபட்டபோது, அதன் வால் பகுதியில் காயம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக மாவட்ட வன அலுவலர் மற்றும் அரசு வன கால்நடை மருத்துவ அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் வச்சினம்பாளையம் பகுதியில் பாகுபலி யானை நடமாடியபோது, சிறுமுகை வனச்சரக அலுவலர் தினேஷ், அரசு வன கால்நடை உதவி மருத்துவ அலுவலர் விஜயராகவன் மற்றும் வனப்பணியாளர்கள் இணைந்து அதன் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்தனர்.
வனத்துறையினரின் தொடர் கண்காணிப்பில், மற்றொரு காட்டுயானையுடன் ஏற்பட்ட மோதலில் பாகுபலி யானையின் வால் பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்தது.யானைக்கு நேரடியாக அருகில் சென்று மருந்து செலுத்துவது சாத்தியமில்லாத சூழல் நிலவியதால், அதற்கு மாற்று முறையில் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.
அதன்படி, தேவையான மருந்துகளை களியில் கலந்து உருண்டைகளாகத் தயாரித்து, பாகுபலி யானை வழக்கமாக நடமாடும் பாதையில் வாழை இலையில் வைத்து வழங்க முடிவு செய்யப்பட்டது.வனத்துறையினர் திட்டமிட்டபடி மருந்து கலந்த களி உருண்டைகளை வாழை இலையில் வைத்தனர்.
அந்த வழியாக வந்த பாகுபலி யானை, அவற்றை உட்கொண்டது.இதையடுத்து, மருந்தின் தாக்கம் மற்றும் யானையின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை வனப்பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
காயம் முழுமையாக குணமடையும் வரை பாகுபலி யானையின் நடமாட்டம், உணவு உட்கொள்ளும் விதம் மற்றும் உடல்நிலை ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கேற்ப அடுத்தகட்ட சிகிச்சை அளிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Baahubali elephant eats medicated clay Forest officials continue monitor health