'ஒரு உயிரைவிட ரூ.20 ஆயிரம் பெரிதா'...? - கர்ப்பிணி தேன்மொழி மரணத்தில் வேல்முருகன் கடும் கண்டனம்...!
Is 20 thousand more than life Velmurugan strongly condemns death pregnant Thenmozhi
நிறைமாத கர்ப்பிணியான தேன்மொழிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோதும், பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாமல் பணியிடத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று தடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியையும், மனிதநேயத்தின் மீதான கேள்வியையும் எழுப்புகிறது. இந்தக் குற்றச்சாட்டு உண்மை எனில், ஒரு மனித உயிரைவிட ரூ.20 ஆயிரம் கடன் பெரிதாகிவிட்டதா? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கம் பகுதியில் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த தேன்மொழியும், அவர் பெற்ற பச்சிளம் குழந்தையும் உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

விறகு வியாபாரி ஆறுமுகத்திடம் ரூ.20 ஆயிரம் முன்பணமாகப் பெற்றிருந்த தேன்மொழியின் குடும்பத்தினர், கடந்த சில மாதங்களாக விறகு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் பணியாற்றிய இடத்திலேயே அமைக்கப்பட்டிருந்த தார்ப்பாய் கூடாரத்தில் தங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அப்போது, வாங்கிய முன்பணத்தைத் திருப்பிச் செலுத்தாமல் வெளியே செல்லக் கூடாது என்று கூறி, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத் தடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்தக் குற்றச்சாட்டு உண்மை எனில், பணத்தைவிட மனித உயிருக்கு மதிப்பு குறைந்துவிட்டதா? வெறும் ரூ.20 ஆயிரம் கடனுக்காக, உயிரைக் காப்பாற்ற வேண்டிய அவசர நேரத்திலும் மருத்துவமனைக்குச் செல்லும் உரிமை மறுக்கப்பட்டதா? என்ற அதிர்ச்சியூட்டும் கேள்விகள் எழுகின்றன.
தேன்மொழியின் உயிரிழப்பு வெறும் துயரச் சம்பவமாக மட்டும் கடந்து செல்லக்கூடியதல்ல. இதன் பின்னால் மறைந்திருக்கும் கொத்தடிமை உழைப்புமுறை குறித்து ஆழமான விசாரணை நடத்த வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.முன்பணம் அல்லது கடன் வழங்கிவிட்டு, அதற்குப் பதிலாக தொழிலாளர்களின் உழைப்பையும், நடமாட்டத்தையும் கட்டுப்படுத்துவது சட்டத்துக்கு எதிரான செயலாகும்.
குறிப்பாக, அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலையிலும் ஒருவர் பணியிடத்தைவிட்டு வெளியேற முடியாத சூழல் உருவாக்கப்பட்டிருந்தால், அது மிகக் கடுமையான மனித உரிமை மீறலாகும்.
எனவே, தமிழக அரசு இந்தச் சம்பவத்தை வெறும் சந்தேக மரணம் என்ற கோணத்தில் மட்டும் அணுகாமல், அதன் முழுப் பின்னணியையும் வெளிக்கொண்டு வர வேண்டும்.தேன்மொழிக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் போனதற்கான காரணம், அவர்களிடம் வழங்கப்பட்ட முன்பணம் மற்றும் அதற்கான கணக்கு, பணியிடத்தில் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்ட விதம், அவர்களின் சுதந்திரமான நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டதா என்பது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் விரிவாக விசாரிக்க வேண்டும்.
குற்றச்சாட்டுகள் விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம், பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் சம்பவத்துக்குப் பொருந்தக்கூடிய பிற கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் விறகுக் கிடங்குகள், கரி தயாரிப்பு மையங்கள், செங்கல் சூளைகள் மற்றும் இதுபோன்ற தொழிலிடங்களில் பழங்குடியின மக்கள் கொத்தடிமைகளாகப் பயன்படுத்தப்படுகிறார்களா என்பதை அரசு சிறப்புக் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
கடன், முன்பணம் என்ற பெயரில் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் நடைமுறைகள் எங்கெல்லாம் உள்ளன என்பதையும் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பை வழங்க வேண்டும்.தேன்மொழியின் குடும்பத்தினருக்கு அரசு உடனடியாக உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்.
அவர்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பு, வீட்டு மனை, வாழ்வாதார உதவி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட மறுவாழ்வு நடவடிக்கைகளையும் உறுதி செய்ய வேண்டும்.கொத்தடிமை நிலையில் இருந்து அவர்கள் மீட்கப்பட்டிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், சட்டப்படி விடுதலைச் சான்றிதழ் மற்றும் மறுவாழ்வுக்கான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்.
உலகைக் காணும் முன்பே உயிரிழந்த தேன்மொழிக்கும், அவரது பச்சிளம் குழந்தைக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் செவ்வணக்கத்தையும் உரித்தாக்குகிறேன்.இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
English Summary
Is 20 thousand more than life Velmurugan strongly condemns death pregnant Thenmozhi