“நிதி நெருக்கடி என சொன்ன விஜய் அரசு.. இப்போது ரூ.1,200 கோடி திட்டமா?” – எம்.எல்.ஏக்கள் கார் முதல் புதிய தலைமைச் செயலகம் வரை எழும் கேள்விகள்! - Seithipunal
Seithipunal


தேர்தல் பிரச்சாரக் களத்தில் இருந்தபோது, தமிழ்நாடு அரசு வரலாறு காணாத அளவுக்கு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும், இதற்கு முந்தைய திமுக அரசின் தவறான நிதி மேலாண்மையே முக்கிய காரணம் என்றும் இன்றைய முதலமைச்சர் விஜய் கடுமையாக விமர்சித்திருந்தார்.

மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துவிட்டதாகவும், மக்கள் வரிப்பணம் முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த விவகாரம் தேர்தல் பிரச்சாரத்திலும் முக்கிய பேசுபொருளாக மாறியது. இதுதொடர்பாக வெள்ளை அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு அரசின் சில நடவடிக்கைகள், தேர்தலுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட நிதி நிர்வாகம் தொடர்பான விமர்சனங்களுடன் முரண்படுவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆட்சிப் பொறுப்பேற்றபோது மாநிலத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு செலவில் புதிய கார்கள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பல சட்டமன்ற உறுப்பினர்கள் சொந்தமாக வாகனங்களை வைத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு அரசு செலவில் புதிய கார்களை வழங்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அதுமட்டுமின்றி, வாகனங்களுக்கான பராமரிப்பு செலவுகளுக்காகவும் அரசின் சார்பில் மாதந்தோறும் கணிசமான தொகை செலவிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து தொடர்ந்து கவலை தெரிவித்த அரசு, மக்கள் வரிப்பணத்தை இத்தகைய சலுகைகளுக்காக செலவிடுவது எந்த அளவுக்கு நியாயம் என்ற விவாதமும் எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள் இந்த வாகனச் சலுகையை ஏற்க மறுத்திருப்பதும் இந்த விவகாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

இதனிடையே, முதலமைச்சரின் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் மேல் தளத்திற்கு மாற்றிய விவகாரமும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. முதலமைச்சரின் அலுவலகத்தை மாற்றுவதற்கான காரணம் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

அதேபோல், முதல்வரின் அலுவலகத்திலிருந்து கடல் காட்சியை பார்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சில கட்டமைப்பு மற்றும் அலங்காரப் பணிகள் குறித்தும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த விவாதங்களுக்கு மத்தியில், சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றக் கட்டிடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

தற்போது சென்னை ஜார்ஜ் கோட்டையில் அரசு தலைமைச் செயலகம் செயல்பட்டு வரும் நிலையில், புதிய பிரம்மாண்டமான தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகத்தை அமைக்க இவ்வளவு பெரிய தொகையை செலவிட வேண்டிய அவசியம் என்ன என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மாநிலத்தில் இன்னும் பல அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டிய நிலையில், சாலைகள், குடிநீர், மழைநீர் வடிகால், மருத்துவம், கல்வி உள்ளிட்ட துறைகளில் கூடுதல் நிதி தேவைப்படும் சூழலில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டுமானத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது சரியா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பு நிதி நெருக்கடி, கடன் சுமை, அரசு செலவுகள் ஆகியவற்றை முன்வைத்து திமுக ஆட்சியை விஜய் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது அவரது தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் சில செலவின நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளுக்கு விமர்சனத்துக்கான புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

“மாநிலத்தின் நிதி நிலைமை மோசமாக இருக்கும்போது, ஆடம்பரச் செலவுகளுக்கு ஏன் முன்னுரிமை?” என்ற கேள்வியே தற்போது முக்கியமாக முன்வைக்கப்படுகிறது. அதே நேரத்தில், புதிய கட்டமைப்புகள் மற்றும் அரசு அலுவலக வசதிகள் நீண்டகால நிர்வாகத் தேவைகளுக்காக மேற்கொள்ளப்படும் முதலீடுகள் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படுமா என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் நிதி ஒழுங்கை முக்கிய வாக்குறுதியாக முன்வைத்த விஜய் அரசு, ஆட்சியில் தற்போது மேற்கொண்டு வரும் செலவினங்களுக்கு எந்த வகையில் நிதி ஆதாரத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் அடுத்தகட்ட அரசியல் விவாதமாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Vijay government spoke of a financial crisis yet now a 1200 crore project Questions arise regarding everything from cars for MLAs to the new Secretariat


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->