பரந்தூர் விமான நிலையம் ரத்து! அதே பகுதியில் ரூ.175 கோடியில் சிப்காட் தொழிற்பூங்கா.. விஜய் அரசின் அடுத்த அதிரடி திட்டம்! - Seithipunal
Seithipunal


சென்னையின் 2வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கும் திட்டத்தை முந்தைய திமுக அரசு தீவிரமாக முன்னெடுத்த நிலையில், அந்தத் திட்டத்துக்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படும் எனக் கூறி தொடர் போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்தது.

விமான நிலையத்துக்காக பெருமளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டதாக முந்தைய ஆட்சியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு நிலம் கையகப்படுத்தப்படவில்லை என்றும், பாதியளவு நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தவெக தரப்பில் கூறப்பட்டது. விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட அறிவிப்பு பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் பகுதி மக்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், பரந்தூர் அருகே மதுரமங்கலம் பகுதியில் தமிழக அரசு புதிய தொழில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அதாவது, மதுரமங்கலத்தில் புதிதாக சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

உலக அளவில் செமிகண்டக்டர் உற்பத்தித் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான போட்டி அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் இந்தத் துறையில் முதலீடுகளை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரமங்கலத்தில் சுமார் ரூ.175 கோடி செலவில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தொழிற்பூங்காவுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு தற்போது தமிழக அரசு தயாராகி வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி வெளியிட்ட அறிவிப்பில், தொழில் பயன்பாட்டுக்காக சுமார் 8.3820 ஹெக்டேர் நிலம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் ‘புன்செய்’ எனப்படும் மானாவாரி நிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த நிலங்களில் வேம்பு மற்றும் தென்னை மரங்கள் இருப்பதாகவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலங்களுக்கான வரைபடங்கள் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சிறப்பு வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அலுவலக நேரத்தில் பொதுமக்கள் அவற்றை நேரில் பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்பூங்கா தொடர்பான அறிவிப்பை முதல்வர் விஜய் ஏற்கனவே சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் வெளியிட்டிருந்தார். மதுரமங்கலத்தில் தொழிற்பூங்கா அமைத்து, செமிகண்டக்டர் உற்பத்தி சார்ந்த தொழில்களுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிவித்திருந்தார்.

முதல்வரின் அந்த அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது மதுரமங்கலம் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதன் மூலம் செமிகண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்க முடியும் என தமிழக அரசு எதிர்பார்க்கிறது.

மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் 2வது விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அதே பகுதியில் செமிகண்டக்டர் தொழில் வளர்ச்சியை மையமாகக் கொண்ட புதிய தொழிற்பூங்கா உருவாக இருப்பது கவனம் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Parandur airport project cancelled SIPCOT industrial park worth 175 crore planned for the same area Vijay government next bold move


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->