'2030-க்குள் கொத்தடிமை இல்லாத தமிழகம் வேண்டும்'...! - பழங்குடியின பெண் பலி விவகாரத்தில் திருமாவளவன் ஆவேசம்...!
We want Tamil Nadu free of bonded labour by 2030 Thirumavalavan obsession issue tribal women sacrifice
பழங்குடியின மக்களை கொத்தடிமைகளாக வைத்து அவர்களின் உழைப்பைச் சுரண்டும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது,"காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின இருளர் சமூகத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி தேன்மொழியும், அவரது பச்சிளம் குழந்தையும் பிரசவத்தின்போதே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணியை ஆராயும்போது, பழங்குடியின மக்களை இன்னமும் கொத்தடிமை நிலையில் வைத்துக்கொண்டு அவர்களின் உழைப்பைச் சுரண்டும் கொடுமை தொடர்வது வெளிச்சத்துக்கு வருகிறது. இந்த மனிதாபிமானமற்ற சம்பவத்துக்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் மர வியாபாரி ஆறுமுகத்தின் செயல்பாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மரம் வெட்டும் தொழிலாளியான ஆனந்தன், அவரது மனைவி தேன்மொழி ஆகிய இருவரும் காஞ்சிபுரம்–அரக்கோணம் சாலையில் உள்ள வெள்ளை கேட் பகுதியில் மர வியாபாரி ஆறுமுகத்திடம் கூலித் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர்.ஆறுமுகத்திடம் முன்பணமாக ரூ.20 ஆயிரம் பெற்றிருந்ததால், அவர் அமைத்துக் கொடுத்த தார்ப்பாய்க் கூடாரத்திலேயே தங்கி இருவரும் வேலை செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 8-ந் தேதி, 9 மாத கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மனைவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆனந்தன் முயன்றுள்ளார்.ஆனால், இதை அறிந்த ஆறுமுகம், பெற்றிருந்த முன்பணத்தைத் திருப்பிச் செலுத்திவிட்டு செல்ல வேண்டும் அல்லது ஒப்படைக்கப்பட்ட மரங்களை முழுமையாக வெட்டி முடித்த பின்னரே அங்கிருந்து செல்ல முடியும் என்று கூறி, தேன்மொழியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு தடை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த நேரத்திலும், பணத்தையும் வேலை முடிய வேண்டிய கட்டாயத்தையும் முன்னிறுத்தி மருத்துவ உதவி கிடைப்பதைத் தடுத்ததாக கூறப்படும் இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பணம் மற்றும் சமூக ஆதிக்கத்தின் அடிப்படையில் வெளிப்படும் இத்தகைய மனிதாபிமானமற்ற அணுகுமுறை கடும் கண்டனத்துக்குரியது.
உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காத சூழலில், தேன்மொழிக்கு அந்த தார்ப்பாய்க் கூடாரத்திலேயே பிரசவம் நிகழ்ந்துள்ளது. அப்போது ஏற்பட்ட கடுமையான வலி மற்றும் அதிகப்படியான ரத்தப்போக்கு காரணமாக தேன்மொழியும், அவரது பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இந்த துயரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மகேஷ் தலைமையிலான காஞ்சி மக்கள் மன்றத்தினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் கடந்த 9-ந் தேதி பொன்னேரிக்கரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த காவலர்கள், உயிரிழந்த தேன்மொழியின் உடலை உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து முறையிட்ட பின்னரே, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவத்தின் உண்மை பின்னணியை முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்காக, தனிப்புலனாய்வுக் குழுவை அமைத்து விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.
மேலும், தேன்மொழியின் உயிரிழப்புக்கு காரணமானதாகக் குற்றம்சாட்டப்படும் மர வியாபாரி ஆறுமுகத்தை கைது செய்து, சட்டத்தின் அடிப்படையில் உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுமட்டுமின்றி, பழங்குடியின மக்கள், இருளர் சமூகத்தினர் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்விடங்களில் அரசு அதிகாரிகள் விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
அவர்கள் எவரேனும் கொத்தடிமைத் தொழிலில் சிக்கவைக்கப்பட்டுள்ளார்களா என்பதை கண்டறிந்து, அவர்களை அந்த நிலைமையிலிருந்து உடனடியாக மீட்க வேண்டும்.கொத்தடிமை முறை முற்றிலும் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில், 2030-ம் ஆண்டுக்குள் ‘கொத்தடிமை முறை இல்லாத மாநிலம்’ என்ற இலக்கை செயல்திட்டமாக முன்னெடுத்து, உழைப்புச் சுரண்டலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
We want Tamil Nadu free of bonded labour by 2030 Thirumavalavan obsession issue tribal women sacrifice