திருவொற்றியூர் துணை நடிகர் கொலை...! - காவல் விசாரணையில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்...! - Seithipunal
Seithipunal


திருவொற்றியூரில் பணம் கொடுக்கல்-வாங்கல் மற்றும் முன்விரோதம் காரணமாக துணை நடிகர் ஒருவர் பட்டப்பகலில் வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 4 பேரை காவலர்கள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் பிரதீப் ராஜ் (28). சினிமா படங்களில் துணை நடிகராக நடித்து வந்த இவர், பட வாய்ப்புகள் இல்லாத நேரங்களில் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதீப் ராஜின் தாயார் ராணி, அதே பகுதியைச் சேர்ந்த நவநீதம் என்ற பெண்ணிடம் பணம் கடனாகப் பெற்றிருந்ததாகவும், அந்தப் பணத்தை மற்றவர்களுக்கு வட்டிக்கு வழங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை உருவாகி, நாளடைவில் முன்விரோதமாக மாறியதாக கூறப்படுகிறது.கடந்த ஜூலை 27-ந் தேதி நவநீதம், பிரதீப் ராஜின் வீட்டுக்குச் சென்று ராணியிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது பிரதீப் ராஜ், அவரது தாயார் ராணி மற்றும் உறவினர்கள் பணத்தைத் திருப்பித் தர முடியாது என்று கூறி நவநீதத்தை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதனால் மனமுடைந்த நவநீதம் தைராய்டு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருவொற்றியூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து பிரதீப் ராஜை கைது செய்தனர். பின்னர் அவர் பிணையில் வெளியே வந்தார்.இந்த நிலையில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி 3 நாட்களுக்கு முன்பு பிரதீப் ராஜ் திருவொற்றியூர் காவலர்களிடமும், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் அலெக்ஸ், பிரதீப் ராஜ் மற்றும் நவநீதம் தரப்பினரை அழைத்து பேசி, இரு தரப்பினரையும் எச்சரித்து அனுப்பியுள்ளார்.மேலும், விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை வைப்பது தொடர்பாகவும் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவலர்கள் எச்சரித்திருந்ததாக கூறப்படுகிறது.இத்தகைய சூழலில், நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் மேற்கு மாட வீதியில் பிரதீப் ராஜ் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த நவநீதத்தின் மகன் நவீன், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்கியதுடன், கத்தியால் சரமாரியாக வெட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த பிரதீப் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சம்பவம் குறித்து திருவொற்றியூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டனர். கொலை தொடர்பாக நவீன் (32), அரி கிருஷ்ணன் (21), ஜாபர் (24), லோகேஷ் (27) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நவீனிடம் காவலர்கள் நடத்திய விசாரணையில், பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை மட்டுமின்றி, விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை வைப்பது தொடர்பாகவும் இரு தரப்பினருக்கும் இடையே நீண்டகாலமாக மனக்கசப்பு இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நவநீதம் நடத்தி வந்த திபன் கடை அமைந்துள்ள பகுதிக்கு அருகே பிரதீப் ராஜும், அவரது நண்பர்களும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின்போது சிலை வைத்து வழிபாடு நடத்தி வந்ததாகவும், இதனால் தனது தாயாரின் வியாபாரம் பாதிக்கப்பட்டதாகவும் நவீன் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பணம் தொடர்பான தகராறு ஏற்கனவே இருந்து வந்த நிலையில், சிலை வைப்பது தொடர்பான பிரச்சினையும் சேர்ந்து இரு தரப்பினருக்கும் இடையிலான பகை மேலும் தீவிரமடைந்ததாக தெரிகிறது.இந்த முன்விரோதத்தின் காரணமாகவே நண்பர்களுடன் சேர்ந்து பிரதீப் ராஜை கொலை செய்ததாக நவீன் வாக்குமூலம் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, பிரதீப் ராஜின் உறவினர்கள் நேற்று திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே திரண்டு, கொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்ற காவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னர் மறியலைக் கைவிடச் செய்தனர்.

மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளிக்க வந்தபோது காவலர்கள் தன்னை மிரட்டியதாக பிரதீப் ராஜ் பேசியதாக கூறப்படும் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முன்கூட்டியே புகார் அளித்த நிலையில், சில நாட்களிலேயே பிரதீப் ராஜ் கொலை செய்யப்பட்டிருப்பது இந்த வழக்கில் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்தும் காவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruvottriyur supporting actor murdered Shocking information revealed police investigation


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->