மண்ணுக்குள் புதைக்கப்பட்ட சடலத்தில் வெளியே தெரிந்த கை...! கோவையில் அதிர்ச்சி தரும் கொலையும் 6 பேர் கைது நடவடிக்கையும்...! நடந்தது என்ன...?
hand ivisible body buried ground Shocking murder Coimbatore and arrest 6 people What happened
கோவை செட்டிபாளையம் அருகே மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த இளைஞரின் சடலத்தில் கை மட்டும் வெளியே தெரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், சடலத்தை தோண்டி மீட்டதுடன், கொலை தொடர்பாக 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.செட்டிபாளையம் அடுத்த ஒத்தக்கால் மண்டம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காலி இடம் ஒன்று உள்ளது.

அந்தப் பகுதியில் நேற்று பொதுமக்கள் சிலர் சென்றபோது, மண்ணில் புதைக்கப்பட்டிருந்த மனிதரின் கை ஒன்று மட்டும் வெளியே தெரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து உடனடியாக செட்டிபாளையம் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள், தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து அப்பகுதியை ஆய்வு செய்தனர்.
சந்தேகம் ஏற்பட்ட இடத்தில் மண்ணைத் தோண்டி சோதனை மேற்கொண்டபோது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.சடலத்தை மீட்ட காவலர்கள், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இளைஞர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
காவலர்களின் முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட பின்னர், அவரது அடையாளம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக ஆள் நடமாட்டம் குறைந்த அந்தப் பகுதியில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த காவலர்கள், சம்பவத்தின் பின்னணி மற்றும் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த துய்தே ரியாங், சுனில் ராய் ரியாங், கோதோ ராம் ரியாங், சுமித் குமார், ஸ்ரமித் தராங், சந்தோஷ் குமார் ஆகிய 6 பேரை காவலர்கள் கைது செய்தனர்.அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாதல் ஷித் என்பதும், அவருக்கு வயது 24 என்பதும் தெரியவந்தது.
மேலும், பாதலை அடித்துக் கொலை செய்ததை 6 பேரும் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலை எதற்காக நடந்தது, சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
hand ivisible body buried ground Shocking murder Coimbatore and arrest 6 people What happened