போதைப்பொருள் விவகாரத்தால் அதிரடி...! அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனை கட்டாயம்...! - விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு
Action due to drug issue Drug testing mandatory for all pilots Aviation Regulatory Authority orders
விமானப் பயணத்தின் போது விமானி ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களிலும் பணியாற்றும் விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனையை கட்டாயமாக்க விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.கடந்த ஆகஸ்டு மாதம் ஏர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற சம்பவம் விமானப் பாதுகாப்பு குறித்த பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அதில் பணியாற்றிய விமானி போதைப்பொருள் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் விமானம் சுமார் 300 அடி தாழ்வாகச் சென்றதாகவும், பின்னர் விமானம் மீண்டும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்து புலனாய்வு பணியகம் விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்ட விமானி பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
விமானத்தில் பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நடந்த இந்த சம்பவம், விமானிகளின் உடல்நலம் மற்றும் பணித்தகுதி கண்காணிப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியது.இதையடுத்து, அனைத்து விமான நிறுவனங்களிலும் பணியாற்றும் விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனையை விரிவுபடுத்த விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதிய நடைமுறையை நாடு முழுவதும் வரும் 2027-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை மந்திரி ராம்மோகன் நாயுடு தெரிவிக்கையில், போதைப்பொருள் பரிசோதனை தொடர்பான புதிய விதிமுறைகளுக்கான வரைவு இந்த மாத இறுதிக்குள் இறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
தற்போது விமானிகளின் எண்ணிக்கையில் சுமார் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே சீரற்ற முறையில் போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இனி இந்திய விமானங்களில் பணியாற்றும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து விமானிகளுக்கும் இந்தப் பரிசோதனை கட்டாயமாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்டு மாதம் தாய்லாந்தில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தின் தலைமை விமானி போதைப்பொருள் பயன்படுத்தியது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட விமானி பணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அனைத்து விமானிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது.விமானப் பயணிகளின் பாதுகாப்பை முதன்மையான நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Action due to drug issue Drug testing mandatory for all pilots Aviation Regulatory Authority orders