ஆளுநர் நியமனங்கள் என்பது அரசியல் நியமனமாக மாறியுள்ளது.. டி.ராஜா விமர்சனம்..!!
CPI Raja saos governor appointments have become political appointments
கோயம்புத்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா ஆளுநர்கள் நியமனம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் "இந்தியாவில் நிலவும் தேசிய பிரச்சனைகள் மற்றும் நாடாளுமன்றம் செயல்படும் விதம் மிகுந்த கவலை அளிக்கிறது.
நாடாளுமன்ற பட்ஜெட்டை ஆழமாக ஆய்வு செய்து பார்த்தபோது இது ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட் ஆகவும் செல்வந்தர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் பட்ஜெட்டாகவும் இருக்கிறது என்பது தெளிவாக புரிகிறது.

பாஜக ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி பெற்று மத்திய மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கின்றன. நமது நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாஜக அரசை அகற்ற வேண்டும்.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசை வீழ்த்திட வேண்டும். இதற்கு மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இந்தியாவில் ஆளுநர்கள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறி வருகிறது. தமிழகத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி சி.பி ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது ஒன்றும் புதியதல்ல ஏற்கனவே எல்.கணேசன், தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவை சேர்ந்தவர்கள் மட்டுமே ஆளுநர்களாக தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் ஆளுநர்கள் மத்திய அரசின் பிரதிநிதிகளாக செயல்பட்டு வருகின்றனர்" என டி.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
CPI Raja saos governor appointments have become political appointments