சென்னை கோயில் நிலத்தில் வசித்த 20 குடும்பங்கள் அகற்றம்: காவல்துறை - அறநிலையத்துறை நடவடிக்கைக்கு மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!
CPI Condemns Police and HR CE Action Over Chennai Temple Land Eviction M Veerapandian Demands Govt Intervention
சென்னை சைதாப்பேட்டை தொகுதி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஆதிசென்ன கேசவ பெருமாள் கோயில் நிலத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை செலுத்தி வசித்து வரும் 20 ஏழை குடும்பங்களை வீட்டை விட்டு வெளியேற்றி, வீடுகளுக்குச் சீல் வைத்த காவல்துறை மற்றும் இந்து அறநிலையத் துறையின் நடவடிக்கைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்குடியிருப்புகளை அகற்றி இடத்தை அபகரிக்கும் நோக்கில் தனிநபர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கிற்கு ஆதரவாக, அறநிலையத் துறை அதிகாரிகளில் சிலர் செயல்பட்டதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை (செப். 7) அப்பகுதியில் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, வீடுகளிலிருந்த பொருள்களைச் சாலையில் வீசியும், கைக்குழந்தைகளுடன் இருந்த மக்களை வெளியேற்றியும் வீடுகளுக்குச் சீல் வைக்கப்பட்டதாக அவர் சாடியுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் வசிப்பிட உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி, அவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, மாணவர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டப் பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
எனவே, தமிழக அரசு இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு 20 குடும்பங்களின் குடியிருப்பு உரிமைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் மு.வீரபாண்டியன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
CPI Condemns Police and HR CE Action Over Chennai Temple Land Eviction M Veerapandian Demands Govt Intervention