எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்கள்.. அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்!  - Seithipunal
Seithipunal


ஒட்டன்சத்திரத்தில்  நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில்  உணவுத்துறை அமைச்சர் பங்கேற்பு பேசினார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காமாட்சி மண்டபத்தில்  நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் பெறும் முகாமில் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில்,  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி  பேசியதாவது:   திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 360 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனை பேணும் வகையில் மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். 

மேலும் இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம்  "உங்களுடன் ஸ்டாலின்"  திட்ட முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒட்டன்சத்திரத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ள "உங்களுடன் ஸ்டாலின்"  திட்ட முகாம் வாயிலாக பெறப்பட்ட மனுக்களில் பிறப்புச்சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் மற்றும் பட்டா மாறுதல் தொடர்பான மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 18.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. 

பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் நகராட்சி பகுதிகளில் ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் தினமும் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு வராது. அந்த வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் கீரனுார் பேரூராட்சி ஆகிய இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும், என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்  பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்  இரா.ஜெயபாரதி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர்  பிரபாவதி, ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திருமலைச்சாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, நகராட்சி ஆணையாளர் சுவேதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Countless schemes for everyone in various waysFood Minister Chakrappani is proud


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->