வாக்கு திருட்டு புகார்..மாநாடு அறிவித்து அதிரடி காட்டும் காங்கிரஸ்!
Complaint of vote theft Congress is making a splash by announcing a big event
7-ந் தேதி மாலை 4 மணியளவில் நெல்லையில் எனது தலைமையில் தேர்தல் கமிஷனின் வாக்கு திருட்டு மோசடியை கண்டிக்கின்ற வகையில் மாநில அளவிலான மாநாடு நடைபெற உள்ளது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். கூட்டணிக்கு கட்சிகளை சேர்ப்பது போன்ற பல்வேறு வேலைகளை அரசியல் கட்சியினர் தீவிரமாக செய்தி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் திமுக அதிமுக போன்ற பலம் வாய்ந்த கட்சிகள் பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். திமுக ஒரு புறம் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று தனது பணியை தொடங்கியுள்ளது. அதேபோல அதிமுக பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்க கூட்டணி அமைத்து தங்களது வேலைகளை தொடங்கியுள்ளனர்.இந்தநிலையில் தேர்தல் கமிஷனை கண்டித்து மாநாடு நடைபெற உள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் கமிஷன் பா.ஜனதா அரசுடன் ரகசிய உடன்பாடு கொண்டு வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி நடத்தியிருப்பதை தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாக ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருக்கிறார்.
தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலை மின்னணு வடிவத்தில் கேட்டால் வழங்க மறுக்கிறது. அப்படி வழங்கினால் 30 வினாடிகளுக்குள் தேர்தல் கமிஷன் செய்த மோசடிகள் அம்பலப்பட்டு விடும் என்பதால் அதை தர மறுக்கின்றன. வேண்டுமென்றே எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை புறக்கணித்து வருகிறது.
இந்தநிலையில் தேர்தல் கமிஷனின் வாக்கு திருட்டு மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட காங்கிரசும் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தியது. அதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி மாலை 4 மணியளவில் நெல்லையில் எனது தலைமையில் தேர்தல் கமிஷனின் வாக்கு திருட்டு மோசடியை கண்டிக்கின்ற வகையில் மாநில அளவிலான மாநாடு நடைபெற உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Complaint of vote theft Congress is making a splash by announcing a big event