நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்திலும் வலுக்கும் குரல்கள்; சென்னையில் பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்; 100க்கும் மேற்பட்டோர் கைது..!
College students protest at several places in Chennai against NEET exam
தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இயக்கத்தினர் நீட் தேர்வு வினாத்தல் கசிவு, தகுதி தேர்வில் குளறுபடி உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விளக்கவேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
20 ஆம் திகதி நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபியினர் பேரணி சென்ற போது காவல்துறைக்கும், போட்றரகார்களுக்கும் இடையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு வன்முறையாக வெடித்தது. இந்த போராட்டத்தின் தாக்கம் ஏனைய மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.
அதன்படி, நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் இன்றும் போராட்டம் நடத்தினர். எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே இளைஞர் பெருமன்றத்தினர் மற்றும் மாணவர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திரண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அத்துடன், போலீஸார் அனுமதிக்காத நிலையிலும், அவர்கள் கலைந்து செல்ல மறுத்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மாணவிகளை பெண் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதேபோல மாநிலக் கல்லூரி மற்றும் புதுக்கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கோஷங்களை எழுப்பினர்.
மேலும், தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகமான பாலன் இல்லம் வளாகத்தில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் 03-வது நாளாக தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்தி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்ததாக, திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளும் கல்லூரி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலரை போலீஸார் கைது செய்ததைத் தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்துள்ளனர்.
அண்ணாசாலையில் பெரியார் சிலை முன்பும் நேற்று மாலை போராட்டம் நடத்த மாணவர் அமைப்பினர் கொடியுடன் திரண்டனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு அவர்களை போலீஸார் சமாதானம் பேசி கலைந்து செல்ல வைத்துள்ள நிலையில், சென்னையில் மேலும் சில இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
English Summary
College students protest at several places in Chennai against NEET exam