அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை கொச்சைப்படுத்தி செய்யப்பட்டுள்ள கைது - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! - Seithipunal
Seithipunal


ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோதியாவை நிபந்தனையின்றி விடுவிக்கமாறு பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்த அவரின் கடிதத்தில், "வேறுபட்ட கொள்கைகளும் பல்வேறு அரசியல் கட்சிகளும்தான் இந்திய ஜனநாயகத்தின் இதயத்துடிப்பு என்பதைத் தாங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன். அதேபோல, சட்டத்தின் ஆட்சியும் தனிமனித சுதந்திரமும் நமது குற்றவியல் நீதிமுறையின் அடித்தளமாகும்.

அப்படி இருக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை இட்டுக்கட்டிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்து, அரசியல் சட்டம் உத்தரவாதம் அளிக்கும் தனிநபர் சுதந்திரத்தை மீறி அவருக்கு வலியையையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியிருப்பது வேதனையும் ஏமாற்றமும் அளிக்கிறது. 

குற்றவியல் நீதிமுறையின் அனைத்து விதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதுடன், வழக்கமான சட்ட நடைமுறைகளும் ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்களின் தனிப்பட மனநிறைவுக்காக மீறப்பட்டிருக்கின்றன.

எங்கெல்லாம் ஒன்றிய ஆளுங்கட்சிக்குத் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் புலனாய்வு அமைப்புகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டு வரும் நிலையைக் கடந்த ஒன்பது ஆண்டுகளில் காண இயலும்.

ஈவிரக்கமின்றி மீண்டும் மீண்டும் இந்த விசாரணை அமைப்புகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் ஆயுதமாக எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் மீது மட்டுமே ஏவப்பட்டு வருகின்றன.

உண்மையில்லாத கலப்படக் குற்றச்சாட்டுகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான கருவிகள் ஆகிவிட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சோதனைகள் நடத்துவது, கட்சித் தாவல் தடைச்சட்டத்தை அப்பட்டமாக மீறித் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்ப்பது, எதிர்க்கட்சித் தலைவர்களையும், பாஜகவுக்குத் தொந்தரவாக இருக்கும் தலைவர்களையும் கைது செய்யப் புலனாய்வு அமைப்புகளை ஆணவத்துடன் ஏவி விடுவது போன்ற அராஜகங்கள் ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக மட்டுமல்லாமல், நெருக்கடிநிலைக் காலத்தை நினைவூட்டுபவையாகவும் அமைந்துள்ளன.

புலனாய்வு அமைப்புகளையும் ஆளுநர் உள்ளிட்ட அரசியல் சட்டப் பதவிகளையும் தவறாகப் பயன்படுத்துவது இந்தியாவின் துடிப்பான மக்களாட்சியை வலுப்படுத்த ஒருபோதும் உதவாது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். உரிய சட்ட நடைமுறைகளை மீறி மணீஷ் சிசோடியாவைக் கைது செய்த நாளானது ஒன்றிய பாஜக அரசின் ஆட்சிக்காலத்தின் கருப்பு நாளாகவே நினைவில் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, கடந்த ஒன்பது ஆண்டு ஒன்றிய பாஜக ஆட்சியில் நாட்டின் முதன்மையான புலனாய்வு அமைப்புகள் மற்றும் குறிப்பாக ஆளுநர் முதலிய அரசியல் சட்டப் பதவிகளுக்கென்று எஞ்சியிருக்கும் மாண்பைக் காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், சட்ட நடைமுறைகளையும், 70 ஆண்டு பழமையான நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் கொச்சைப்படுத்திக் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Stalin Letter to PM Modi For Manish arrest case


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->