சாலை பெயர்களில் சாதி அடையாளங்கள் நீக்கம்... முக்கிய அறிவிப்பை மீண்டும் வலியுறுத்திய CM ஸ்டாலின்!
TN CM MK Stalin Grama Sabha
தமிழகத்தின் 12,480 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முன்பாக இரண்டு முறை நேரடியாக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இம்முறை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுடன் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.
“எல்லோரும் நல்லா இருக்கீங்களா” என பொதுமக்களிடம் கேட்டுத் தொடங்கிய அவர், “நாட்டின் முதுகெலும்பாக கிராமங்களே உள்ளன. காந்தியடிகள் ‘இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது’ என கூறினார். மக்களுடன் மக்களாக இருந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தவர் அண்ணா. அவர் காட்டிய பாதையில் கலைஞர் கருணாநிதி உயர்ந்த இலட்சியங்களை நிறைவேற்றினார்” என்றார்.
அவர் மேலும், “தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஒருங்கிணைந்த கிராம சபை கூட்டங்கள் இதுவே முதல் முறை. பெண்கள் முன்னேற்றத்தில் விடியல் பயணம் முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் படித்து முன்னேற மக்கள் உறுதி செய்ய வேண்டும். 100 நாள் வேலைத்திட்டம் முறையாக நடைமுறைப்பட வேண்டும். 21 ஆயிரம் கிலோமீட்டர் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.
மேலும் “சமத்துவம், சமதர்மம், சமூகநீதியை நிலைநாட்டி வருகிறது திராவிட மாடல் அரசு. கிராமங்களை சுத்தமாக வைத்திருங்கள், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறையுங்கள். தண்ணீரை பணம் போல் மதித்து பயன்படுத்துங்கள். மழைநீர் சேமிப்பில் அனைவரும் பங்கு பெற வேண்டும். சாலை பெயர்களில் சாதி அடையாளங்கள் இருந்தால் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கிராம நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க வேண்டும்” எனவும் கூறினார்.
முடிவில், “மக்கள் முன்வைக்கும் குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும்” என உறுதி அளித்து, ஒவ்வொருவரும் தங்கள் கிராம முன்னேற்றத்தில் பங்களிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
English Summary
TN CM MK Stalin Grama Sabha