வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! சென்னையில் மழைக்கு வாய்ப்பு!
Chennai IMD Report tamilnadu
வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் உருவான புயல் சின்னம், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செப். 2 அன்று வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு, வலுவடைந்து செப். 3 காலை நிலவரப்படி வடக்கு ஒடிசா கடற்கரைக்கு அப்பால் உள்ள பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக காணப்படுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை கடந்து செல்லக்கூடும் என முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, செப். 3 அன்று தமிழகத்தின் சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளது. செப். 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் தமிழகத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (செப். 3) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாக இருக்கும். நாளை (செப். 4) வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை அதிகபட்சம் 34-35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 27-28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai IMD Report tamilnadu