தோனியிடம் வாக்குமூலம் பெற வழக்கறிஞரை நியமியுங்கள் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Chennai HC MS Dhoni case
ஐபிஎல் சூதாட்ட வழக்கைச் சார்ந்த அவதூறு குற்றச்சாட்டில், 100 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தாக்கல் செய்த வழக்கில், அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014ல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், தோனி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியா கார்ப்பரேஷன், நியூஸ் நேஷன் நெட்வொர்க் பிரைவேட் லிமிட்டெட் உள்ளிட்டோரின் மீது, தொலைக்காட்சி விவாதத்தில் அவதூறு கருத்துக்கள் கூறியதாக குற்றம் சாட்டினார். கடந்த பத்து ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இன்று (ஆகஸ்ட் 11) நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. இதில், தோனி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சாட்சி விசாரணையைத் தொடங்க அவர் முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாகவும், ஆனால் பிரபலமானவர் என்பதால் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகும்போது குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
ஆகையால், வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, அக்டோபர் 20 முதல் டிசம்பர் 10க்குள் அனைத்து தரப்பினருக்கும் வசதியான இடத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரப்பட்டது.
நீதிபதி இந்த கோரிக்கையை ஏற்று, உயர் நீதிமன்ற பட்டியலில் இருந்து வழக்கறிஞர் ஆணையரை தேர்வு செய்வதாகவும், வாக்குமூலம் பதிவு முடிந்த பின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.