சோகத்தில் முடிந்த கார் பயணம்...! மரத்தில் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர்கள் இருவர் உயிரிழப்பு...!
car trip ended tragedy Two engineering students died accident that hit tree
கரூர் அருகே சாலையோர மரத்தில் கார் அதிவேகமாக மோதி உருக்குலைந்த விபத்தில், காரை ஓட்டிச் சென்ற என்ஜினீயரிங் மாணவரும், அவருடன் பயணம் செய்த மாணவியும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காரில் இருந்த 3 மாணவிகள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கவுதம் (21). இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று கவுதம் தனது கல்லூரியில் படித்து வரும் கரூர் மாவட்டம் மோகனூர் பகுதியைச் சேர்ந்த மதுப்பிரியா, காமினி, அனுசுயா மற்றும் தேவதர்ஷினி ஆகியோருடன் காரில் கரூர் நோக்கி புறப்பட்டார். காரை கவுதம் ஓட்டிச் சென்றார்.கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கவுதமின் கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சாலையில் தாறுமாறாக சென்ற கார், சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கர வேகத்தில் மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.இந்த கோர விபத்தில் காரை ஓட்டிய கவுதம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காரில் பயணம் செய்த மாணவிகளும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.விபத்தின் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்களும், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அவர்கள் விபத்தில் சிக்கிய மாணவிகளை மீட்டு, அவசர சிகிச்சைக்காக கரூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மதுப்பிரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காமினி, அனுசுயா மற்றும் தேவதர்ஷினி ஆகிய 3 மாணவிகளும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். விபத்து நடைபெற்ற விதம், கார் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சாலை விபத்தில் கல்லூரி மாணவர் மற்றும் மாணவி உயிரிழந்த சம்பவம் கரூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
car trip ended tragedy Two engineering students died accident that hit tree