கடத்தப்பட்ட நிருபர் உள்ளிட்ட நான்கு பேர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுக எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்ட 50 பேர்; பாஜக அண்ணாமலை மற்றும் தவெக கண்டனம்..!
BJPs Annamalai and the TVK have condemned the attack on the journalist
கரூரில் பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் நிருபர் கடத்தப்பட்டு, கொலை வெறி தாக்குதலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் கிருஷ்ணராயபுரத்தில் அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக புகார் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற திருச்சி செய்தியாளர் கதிரவனை சுற்றிவளைத்து கனிமவளக் கொள்ளை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
அவர்களிடம் இருந்த கேமரா, மைக் ஆகியவற்றை பிடுங்கி வைத்துக்கொண்டு நிருபர் மீதும் அவருடன் சென்ற ஒளிப்பதிவாளர், வழக்கறிஞர் உள்ளிட்ட 04 பேர் மீது திமுக எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்ட 50 பேர் நிருபர் கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கொலை வெறித்தாக்குதல் நடத்திய நடத்தியுள்ளனர். 04 பேரையும் கும்பல் கடத்திய நிலையில் சுமார் ஒரு மணி நேரம் கடந்தும் யாரையும் தொடர் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல் துறை, டிஎஸ்பி தலைமையிலான காவல் படையை சம்பவ இடத்திற்கு எஸ்.பி.ஜோஸ் தங்கையா அனுப்பி வைத்துள்ளார். அப்போது நிருபர் உள்ளிட்ட 04 பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் மீது தாக்குதல் நடந்த சம்பவத்திற்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் தவெக துணைப் பொதுச் செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாஜக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது;
''கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த கிருஷ்ணராயபுரம் பகுதியில் நடைபெறும், சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற @NewsTamilTV24x7
செய்தியாளர் திரு. கதிரவன், ஒளிப்பதிவாளர் திரு. செபாஸ்டின் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல், கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கனிமச் சுரண்டலை கேள்வி கேட்டதற்காக, ஊடகவியலாளர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்த ரவுடிகள், முழுக்க முழுக்க திமுகவின் பாதுகாப்பிலேயே செயல்படுகிறார்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். திமுக அரசு, யாருக்காக ஆட்சி நடத்துகிறது? கடத்தல்காரர்களுக்கும், ரவுடிகளுக்குமா?
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக்குப் பின்னால் உள்ள அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தவெக துணைப் பொதுச் செயலாளர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள கண்டன பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
''செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் பத்திரிகையாளர்கள் மீது திமுக எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்குக் கடும் கண்டனம்!
கிருஷ்ணராபுரம் பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக நடைபெற்று வரும் கனிம வளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற 'நியூஸ் தமிழ்' செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது நடத்தப்பட்ட கோரமான தாக்குதல் அதிர்ச்சியையும் மிகமிகுந்த வேதனையையும் அளிக்கிறது. சட்ட விரோத முறைகேடுகள் நடப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற ஊடகவியலாளர்களை, ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி அவர்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கியிருப்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப் போற்றப்படும் ஊடகத்துறையின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதைச் சுட்டிக்காட்டும் இந்தச் சம்பவத்திற்குத் வன்மையான கண்டனங்கள். ஊடகச் சுதந்திரத்தை நசுக்கும் எந்தச் சக்தியையும் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். மறக்க மாட்டார்கள். '' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
BJPs Annamalai and the TVK have condemned the attack on the journalist