எனக்கு இன்னும் இசை தெரியாது! 1,541 படங்களுக்குப் பிறகும் வியக்கவைக்கும் தன்னடக்கம்! - பத்மபாணி இளையராஜா
I still dont know music Remarkable humility even after 1541 films Padmapani Ilaiyaraaja
மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் அரங்கேறிய 11-வது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய திரையிசையின் சக்கரவர்த்தி இசைஞானி இளையராஜாவுக்கு உயரிய 'பத்மபாணி' வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட திரைத்துறை ஜாம்பவான்கள் முன்னிலையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் தொடக்கத்தில், அண்மையில் விமான விபத்தில் அகால மரணமடைந்த மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், விருதைப் பெற்றுக்கொண்ட பின் உணர்வுப்பூர்வமாகப் பேசிய இளையராஜா, "இந்த விழா மேடைக்கு வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் எனது 1,541-வது படத்தின் பின்னணி இசைப் கோப்புகளை நிறைவு செய்தேன்" எனத் தனது அயராத உழைப்பை வெளிப்படுத்தினார்.
மேலும், "இசையின் நுணுக்கங்களை எப்படி இவ்வளவு துல்லியமாகக் கையாளுகிறீர்கள்?" என்ற கேள்விக்கு, "எனக்கு இன்னும் இசை முழுமையாகத் தெரியாது; நான் இன்னும் ஒரு மாணவன் தான். ஒருவேளை நான் இசையைக் கற்றுத் தேர்ந்துவிட்டதாகக் கருதியிருந்தால், இந்நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்திருப்பேன்.
கற்க வேண்டிய கடல்கள் இன்னும் மிச்சமிருப்பதால்தான் நான் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறேன்" எனத் தனது எளிமையை பறைசாற்றினார்.நவீனத் தொழில்நுட்பம் குறித்துப் பேசிய அவர், "நான் பயணத்தைத் தொடங்கிய 1968-களில் தொழில்நுட்ப வசதிகள் இல்லை. இன்று கணினிகள் மூலம் எவரும் இசையமைக்கலாம் என்ற சூழல் வந்திருக்கிறது.
இருப்பினும், நேரடி வாத்தியங்கள் (Live Orchestra) உருவாக்கும் ஆன்மார்த்தமான உணர்வை எந்திரங்களால் ஒருபோதும் ஈடு செய்ய முடியாது. அதனால்தான், இன்றும் ஒவ்வொரு வாத்தியத்திற்கும் தனித்தனியாகக் குறிப்புகளை (Notes) கைப்பட எழுதி, நேரடி இசைப் பதிவிலேயே நான் கவனம் செலுத்துகிறேன்" எனத் தனது கலை நேர்த்தியைப் பகிர்ந்து கொண்டார்.
English Summary
I still dont know music Remarkable humility even after 1541 films Padmapani Ilaiyaraaja