2019 உலகக்கோப்பை ஏமாற்றம் முதல் அவமதிப்பு வரை! - யுவராஜ் சிங்கின் திடீர் ஓய்வு முடிவின் பின்னணியில் இவ்வளவு சோகமா...?
disappointment 2019 World Cup humiliation sadness behind Yuvraj Singh sudden retirement decision
இந்திய கிரிக்கெட் வரலாற்றின் 'மகுடம் சூடா மன்னன்' என வர்ணிக்கப்படும் அதிரடி நாயகன் யுவராஜ்சிங், 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முதுகெலும்பாகத் திகழ்ந்தவர்.
அந்தத் தொடரில் 362 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகளை வாரிச் சுருட்டி 'தொடர் நாயகன்' விருதைத் தட்டிச் சென்ற அவர், அதன் பின் கொடிய புற்றுநோயைச் சவாலுடன் எதிர்கொண்டு மீண்டு வந்து, மீண்டும் களமிறங்கிப் பலரையும் வியக்க வைத்தார்.

இருப்பினும், 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காத நிலையில், சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.தற்போது, சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஓய்வு முடிவின் பின்னணியில் இருந்த கசப்பான உண்மைகளை முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் யூடியூப் நேர்காணலில் யுவராஜ் வெளிப்படுத்தியுள்ளார்.
"எனது கிரிக்கெட் பயணத்தின் அந்திமக் காலத்தில், அணியில் எனக்குக் கிடைக்க வேண்டிய உரிய அங்கீகாரமும், மரியாதையும் கிடைக்கவில்லை," என உருக்கமாகக் குறிப்பிட்டார்.மேலும் அவர் பேசுகையில், "ஒரு கட்டத்தில் என்னால் ஆட்டத்தை ரசிக்க முடியாமல் போனது.
முறையான ஆதரவும் மரியாதையும் இல்லாத சூழலில், யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை எனத் தோன்றியது. அந்தச் சமயத்தில் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பெரும் அழுத்தத்திற்கு ஆளானேன். என் உயிராக நேசித்த கிரிக்கெட்டே எனக்கு ஒரு பெரும் சுமையாக மாறியது.
எப்போது ஓய்வு முடிவை அறிவித்தேனோ, அப்போதே அந்தப் பாரம் என்னை விட்டு நீங்கியது; அதன் பிறகே நான் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பினேன்" எனத் தனது மனப் போராட்டத்தைப் பகிர்ந்து கொண்டார்.
English Summary
disappointment 2019 World Cup humiliation sadness behind Yuvraj Singh sudden retirement decision