.ஷங்கரின் மெகா கம்பேக் முயற்சி – ‘வேள்பாரி’யில் பாலிவுட் ஹீரோ நடிக்கப் போறாரா?.. ஷங்கரின் மாஸ்டர் பிளான்!
Shankar mega comeback attempt Is a Bollywood hero going to star in Velpaari Shankar master plan
ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவை மட்டுமல்ல, இந்திய சினிமாவையே தனது பிரம்மாண்ட இயக்கத்தால் வியக்க வைத்தவர் இயக்குநர் ஷங்கர். ஜீன்ஸ் படத்தில் ஒரே பாடலில் உலகின் ஏழு அதிசயங்களை காட்சிப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அவர், எந்திரன் மூலம் இந்திய சினிமாவை உலக அரங்கில் கவனிக்க வைத்தார். டோலிவுட்டில் ராஜமெளலி போன்ற இயக்குநர்கள் பிரம்மாண்ட படங்களை உருவாக்குவதற்கு முன்பே, பாலிவுட்டுக்கே சவால் விடும் வகையில் தனது படங்களை கான்ஸ் வரை கொண்டு சென்றவர் ஷங்கர்.
2.0 படத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டை நடிக்க வைக்க முயற்சி செய்ததாகவும், பட்ஜெட் காரணமாக இறுதியில் அக்ஷய் குமார் தேர்வானதாகவும் பேசப்பட்டது. 2.0 வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றாலும், அதன் அதிகமான தயாரிப்பு செலவு காரணமாக விமர்சனங்களையும் சந்தித்தார் ஷங்கர். அதன்பின், சுமார் ஐந்து ஆண்டுகள் தாமதமாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன் என தொடர்ச்சியாக சாதனைகள் படைத்த ஷங்கர், விஜய்யை வைத்து எடுத்த நண்பன் படத்திலிருந்தே வசூல் மற்றும் விமர்சன ரீதியான சரிவை சந்திக்கத் தொடங்கினார். அதன் பின்னர் ஐ, 2.0 என அவரது சோதனை காலம் நீடித்த நிலையில், சமீபத்தில் வெளியான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகியவை முழுமையான தோல்விகளாக அமைந்தது அவரது திரை வாழ்க்கைக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.
“சினிமாவுக்கு முழு சின்சியாரிட்டி இல்லையெனில், சினிமா நம்மை தூக்கி அடித்து விடும்” என்று ஒருகாலத்தில் ஷங்கர் சொன்ன வார்த்தைகளே, இன்று அவருக்கே பொருந்தி விட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், முன்னணி நடிகர்களைப் போலவே, ஒரு வெற்றிப் படம் மூலம் பிரபல இயக்குநர்களும் மீண்டும் தங்களின் சிம்மாசனத்தை பிடித்து விட முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
அந்த நம்பிக்கையோடு தான், ஷங்கர் தற்போது தனது கனவு திட்டமான வேள்பாரி திரைப்படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறார். இந்த படம் உருவானால், ஷங்கர் மீண்டும் ராஜமெளலிக்கு நேரடி சவால் விடும் இயக்குநராக மாறுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
வேள்பாரி படத்தில் நடிகர் சூர்யா நடிப்பார் என முதலில் பேசப்பட்ட நிலையில், தற்போது ஷங்கர் மீண்டும் தனது அந்நியன், ஐ படங்களின் நாயகனான சியான் விக்ரமையே தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை ரன்வீர் சிங்கை வைத்து எடுக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரன்வீர் சிங்கும் வேள்பாரி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான பென் மீடியா ஸ்டூடியோஸ் இந்த மெகா படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துரந்தர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ரன்வீர் சிங்கை ஷங்கர் இயக்கினால், இப்படத்தின் எதிர்பார்ப்பு இந்திய அளவில் பல மடங்கு உயரும் எனக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தை சுமார் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் பட்ஜெட் கட்டுப்பாடு மற்றும் படப்பிடிப்பு நாட்கள் நீடிக்கக் கூடாது என்ற கடும் நிபந்தனைகளை தயாரிப்பாளர் தரப்பில் இருந்து விதிக்கப்பட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது. இந்தியன் 2, இந்தியன் 3 மற்றும் கேம் சேஞ்சர் போன்ற படங்களில் இந்த கட்டுப்பாடுகளை மீறியதே சிக்கல்களுக்கு காரணம் என திரையுலக வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மொத்தத்தில், வேள்பாரி திரைப்படம் ஷங்கரின் திரை வாழ்க்கையில் ஒரு தீர்மானமான திருப்பமாக அமையுமா, அல்லது அவரது சரிவை மேலும் உறுதிப்படுத்துமா என்பதே தற்போது தமிழ் மற்றும் இந்திய சினிமா ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
English Summary
Shankar mega comeback attempt Is a Bollywood hero going to star in Velpaari Shankar master plan