தொட முடியாத உயரத்தில் திமுக கூட்டணி! - 45% ஆதரவுடன் முதலிடம்! - கருத்துக் கணிப்புகளைச் சுட்டிக்காட்டி கே.என்.நேரு பெருமிதம்
DMK alliance untouchable height First place 45 percentage support kn Nehru expresses pride citing opinion polls
அமைச்சர் கே.என்.நேரு விடுத்துள்ள அதிரடி அறிக்கையில், 'திராவிட மாடல் 2.0' ஆட்சியை மீண்டும் அரியணையில் ஏற்றத் தமிழக மக்கள், குறிப்பாகப் பெண்கள் உறுதியெடுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'டெக்கான் க்ரானிகல்' ஆய்வுக் கட்டுரையும், 'இந்தியா டுடே - சி வோட்டர்ஸ்' கருத்துக் கணிப்பும் இதனை வழிமொழிவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெண்களின் இதயங்களை வென்றதில் தி.மு.க. முதலிடத்தில் இருப்பதாகவும், சிறுபான்மையினரின் 80% வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கே கிடைக்கும் என்றும் சமூகவியலாளர்கள் கணிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா டுடே கணிப்பின்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணி 45% ஆதரவுடன் எட்ட முடியாத உயரத்தில் இருப்பதாகவும், எதிர் தரப்பு வெறும் 33% மட்டுமே பெற்றுள்ளதாகவும் அவர் விவரித்துள்ளார். 2019 முதல் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அணி, 2026-லும் வரலாற்றுச் சாதனையைப் படைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மூலம் 1.30 கோடி குடும்பத் தலைவிகள் பயன்பெறுவது, 800 கோடி முறைக்கும் மேல் பெண்கள் 'விடியல் பயணம்' மேற்கொண்டிருப்பது போன்றவை இந்த அசைக்க முடியாத ஆதரவிற்குச் சான்றாகும்.
மேலும்,மாணவிகளுக்கான 'புதுமைப் பெண்' திட்டம், கிராமப்புறப் பெண்களுக்கான 'தோழி விடுதிகள்', குழந்தைகளின் பசி போக்கும் 'காலை உணவுத் திட்டம்' எனத் திராவிட மாடல் அரசு பெண்களின் முன்னேற்றப் பாதையைச் செழுமைப்படுத்தி வருவதாக அவர் பட்டியலிட்டுள்ளார்.
மேலும், 3.39 லட்சம் சிறுமிகளுக்குக் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்கும் திட்டம் மற்றும் பெண்கள் பாதுகாப்புச் சட்டத் திருத்தம் மூலம் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிலும் முதலமைச்சர் அக்கறை காட்டி வருவதைச் சுட்டிக்காட்டினார்.
உண்மைகளைச் ஜீரணிக்க முடியாமல் அவதூறு பரப்புபவர்களைத் தமிழகப் பெண்கள் புறந்தள்ளிவிடுவார்கள் என்றும், 45% என்ற கணிப்பையும் தாண்டி மிகப்பெரிய வெற்றியைப் பெண்கள் தி.மு.க-வுக்கு மகுடமாகச் சூட்டுவார்கள் என்றும் கே.என்.நேரு தனது அறிக்கையில் சூளுரைத்துள்ளார்.
English Summary
DMK alliance untouchable height First place 45 percentage support kn Nehru expresses pride citing opinion polls