மூணு வருஷத்துக்கு முன்னாடி வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் துயரம்..– பர்சனல் விஷயத்தை ஷேர் செய்த செல்வராகவன்!
A great tragedy that happened in life three years ago Selvaraghavan shared a personal matter
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன், சமீப காலமாக நடிகராகவும் கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில், அவர் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட துயர அனுபவம் குறித்து மனம் திறந்து பேசிய வீடியோ ஒன்று, ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
ரீ-ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் சூழலில், செல்வராகவனின் *ஆயிரத்தில் ஒருவன்* திரைப்படம் மீண்டும் திரைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் அந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் எண்ணம் இல்லை என்று அவர் ஏற்கனவே திட்டவட்டமாக கூறியிருந்தார். மேலும், அந்த படம் தமிழ் ரசிகர்களால் எதிர்பார்த்த அளவு கொண்டாடப்படவில்லை என்றும், ஆனால் தெலுங்கு ரசிகர்கள் படத்தை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார்கள் என்றும் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தனது சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி தத்துவம் சார்ந்த கருத்துகளையும், வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து வரும் செல்வராகவன், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தனது சொந்த வாழ்க்கையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு பெரும் துயர சம்பவம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:“இந்த விஷயத்தை ரொம்ப நாளாக உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது தான் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இது கொஞ்சம் சென்சிட்டிவான விஷயமாக இருக்கலாம். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என் வாழ்க்கையில் ஒரு பெரிய துயரம் நடந்தது. அந்த துயரத்தை என்னால் தாங்க முடியவில்லை. நான் வெளிப்படையாக அழவில்லை, ஆனால் என் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வந்துகொண்டே இருந்தது.
மனதிற்குள் ‘இது கடவுள் கொடுத்த சோதனை’ என்று நினைத்துக் கொண்டாலும், ‘கடவுளே, எனக்கு ஏன் இப்படி சோதனைகளை கொடுக்கிறாய்?’ என்று நான் கேள்வி கேட்டிருக்கிறேன். ஆனால் அந்த சம்பவம் நடந்து ஒரு வருடத்திற்குப் பிறகு, என் வாழ்க்கையில் இன்னொரு கடினமான சம்பவம் ஏற்பட்டபோது, அந்த முதல் துயரமே எனக்கு மனவலிமையை உருவாக்கி, அடுத்த சோதனையை தாங்கும் சக்தியை கொடுத்தது என்று புரிந்துகொண்டேன். கடவுள் என்னை தயார் செய்யத்தான் அந்த துயரத்தை கொடுத்தார் என்று இப்போது நினைக்கிறேன்.
உங்களுக்கும் வாழ்க்கையில் இப்படிப்பட்ட துயரங்கள் ஏற்பட்டால், ‘நம்மை வலிமையாக்கத்தான் கடவுள் இப்படி செய்கிறார்’ என்று நினைத்துக் கொள்ளுங்கள்,” என அவர் தெரிவித்துள்ளார்.
செல்வராகவனின் இந்த நேர்மையான மற்றும் உணர்வுப்பூர்வமான பேச்சு, ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. வாழ்க்கையின் கடின தருணங்களை தத்துவமாக மாற்றி, அதிலிருந்து வலிமையை பெறுவது குறித்து அவர் கூறிய கருத்துகள், சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
English Summary
A great tragedy that happened in life three years ago Selvaraghavan shared a personal matter