அனைத்துக்கும் நான் காரணமா? அமித்ஷா சொன்னதற்காக பொறுத்து கொள்கிறேன்.. அதிமுகவை எச்சரித்த அண்ணாமலை! 
                                    
                                    
                                   BJP Annamalai warn to ADMK 
 
                                 
                               
                                
                                      
                                            பசும்பொன்னில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக தலைவர் டிடிவி தினகரன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதற்கு தானே காரணம் என்ற குற்றச்சாட்டை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மறுத்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுகவில் சிலர் என்னை குறிவைத்து பேசுகிறார்கள். ஆனால் பசும்பொன்னில் மூவரும் ஒன்றிணைந்ததற்கு நான் காரணமில்லை. நான் வாய் திறந்தால் எல்லாவற்றையும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்து விடுவேன். ஆனால், அமித் ஷாவிடம் ‘லட்சுமண ரேகை தாண்ட மாட்டேன்’ என்று வாக்குக் கொடுத்துள்ளேன். எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு” என்று எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை திமுக அரசை கடுமையாக விமர்சித்தார், “தமிழக அரசின் உள்ளாட்சித் துறை மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையில் பெரிய அளவில் ஊழல்கள் நடந்துள்ளன. உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவ்வாறான குற்றச்சாட்டுகளை மறைக்கும் நோக்கில் முதல்வர், பிகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் தமிழர்களை அவமதித்ததாக பொய்யான தகவல் பரப்புகிறார்,” என்றார்.
மேலும், “முந்தைய காலங்களில் திமுக தலைவர்களே பிகார் மக்களை இழிவாக பேசிய வீடியோக்கள் உள்ளன. பிரதமர் அதையே சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை திமுக எதிர்க்கிறது. வாக்குரிமை யாரிடமும் பறிக்கப்படவில்லை; மாறாக, முறைகேடுகளை சரிசெய்யும் முயற்சிதான் இது. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை யாரும் எதிர்க்க முடியாது,” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
                                     
                                 
                   
                       English Summary
                       BJP Annamalai warn to ADMK