கோவையில் மோசமான வானிலை: மதுரைக்கு திருப்பப்பட்ட கோவை விமானம்! பயணிகள் பாதுகாப்பு!
Bad Weather Forces Chennai-Coimbatore Flight Reroute to Madurai Mumbai Flight Delayed
கோவையில் நிலவி வரும் கடுமையான சீரற்ற வானிலை மற்றும் அடர்ந்த மேகமூட்டம் காரணமாக, சென்னையில் இருந்து கோவை சென்ற இண்டிகோ பயணிகள் விமானம் தரையிறங்க முடியாமல் வான்வெளியில் நீண்ட நேரம் வட்டமிட்டது. பாதுகாப்பு கருதி, இறுதியில் அந்த விமானம் மதுரை விமான நிலையத்திற்குத் திருப்பப்பட்டு வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பயணிகள் பயணித்த இந்த இண்டிகோ விமானம், கோவை வான்வெளியை அடைந்தபோது ஓடுதளத்தை அணுக முடியாத அளவுக்கு மோசமான காலநிலை நிலவியது. இதனால் விமானி உடனடியாக விமானத்தை ஆகாயத்திலேயே வட்டமடிக்கச் செய்தார். வானிலையில் சீரமைப்பு ஏற்படாததால், விமானக் கட்டுப்பாட்டு அறையின் வழிகாட்டுதலின்படி விமானத்தை மதுரைக்குத் திருப்ப முடிவெடுக்கப்பட்டு, மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் பெருமூச்சு விட்டனர்.
இதேபோன்று, மும்பையிலிருந்து மதுரை நோக்கி வந்த மற்றொரு இண்டிகோ விமானமும் மதுரை வான்வெளியில் சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாகத் தரையிறங்க முடியாமல் ஆகாயத்தில் வட்டமிட்டபடி இருந்தது. கோவையிலிருந்து திருப்பப்பட்ட விமானம் மதுரையில் தரையிறங்கியதைத் தொடர்ந்து, சற்றே தாமதமாக இந்த மும்பை விமானமும் மதுரையில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
English Summary
Bad Weather Forces Chennai-Coimbatore Flight Reroute to Madurai Mumbai Flight Delayed