அயோத்தி சரயு நதிக்கரையில் தீப உற்சவம்; தீபாவளிக்கு 27 லட்சம் தீபங்கள் ஏற்றி தன் சாதனையை தானே முறியடிக்கும் உ.பி. அரசு..!
The UP government is set to break its own record by lighting 27 lakhs lamps for Diwali in Ayodhya
உத்தரபிரதேசத்தில் ராமர் கோவில் நகரமான அயோத்தியில் பத்தாவது ஆண்டாக தீப உற்சவம் நடைபெறவுள்ளது. இங்குள்ள சரயு நதிக்கரையில் கடந்த 09 வருடங்களாக உ.பி அரசு சார்பில் தீப விளக்குகள் ஏற்றப்படுகின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தீப விளக்குகள் அதிக எண்ணிக்கையில் ஏற்றி, உ.பி அரசு உலக சாதனையாக கின்னஸில் இடம் பெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போல் இந்த வருடமும் தனது சாதனையை தானே முடியடிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு, 27 லட்சம் தீப விளக்குகள் ஏற்றப்படவுள்ளன.
கடந்த வருடம் தீபாவளியில் 26 லட்சம் தீப விளக்குகளை ஏற்றி உலக சாதனை படைக்கப்பட்டது. உ.பி. பாஜக முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் கனவுத் திட்டமாக இது கருதப்படுகிறது.
இந்த வருடம் நவம்பர் 05 முதல் 08 வரையிலான தேதிகளில் இந்த தீப உற்சவம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உ.பி அரசு சார்பில் அதன் கல்வி நிலையமான அயோத்தியின் அவத் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்கிறது.
இது குறித்து அவத் பல்கலைக்கழக துணைவேந்தரான பிரிஜேந்தர் சிங் பிரபல செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்; இந்நிகழ்ச்சிக்காக சுமார் 35,000 தன்னார்வலர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளதாகவும், ஒவ்வொரு வருடமும் போல் இந்த வருடமும் சரயு நதிக்கரையில் விளக்குகள் ஏற்றப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதிலும், இந்த வருடம் ஒரு லட்சம் விளக்குகள் கூடுதலாக ஏற்றப்பட உள்ளதாகவும், இவை நதிக்கரையின் அக்கம், பக்கப் பகுதிகளில் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகிவரும், பல்கலையுடன் எங்கள் உறுப்புக் கல்லூரிகளின் மாணவர்களும் இணைந்து இப்பணியில் அதிகமாகப் பங்கு பெறுகின்றதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 35,000 தன்னார்வலர்களையும் ஒரு டாடா பேஸ் வாயிலாக இணைக்க முடிவாகியுள்ளதாகவும், இதற்கான நிர்வாகப் பணியில் அயோத்தியின் மாவட்ட ஆட்சியர் மற்றும் பிராந்திய ஆணையர் அலுவலக நிர்வாகமும் உதவி புரியவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், இந்த தீப உற்சவ நாட்களில் அப்பகுதியை சுத்தமாக வைத்திருக்க போதுமான அளவில் குப்பை கூடைகளும், பொதுமக்களுக்கானக் குடிநீரும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. மேலும், தன்னார்வலர்களாக சுமார் 5,000 பெண்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆனால், இதில் பள்ளிச் சிறுவர்கள் பங்குபெற அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சிக்காக 14 தற்காலிக மருத்துவமனை முகாம்களும், ஆம்புலன்ஸ் சேவைகளும் 24 மணி நேரமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மருத்துவப் பணியில் 45 மருத்துவர்களும் அமர்த்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
The UP government is set to break its own record by lighting 27 lakhs lamps for Diwali in Ayodhya