நெல் கொள்முதல் ஊக்கத்தொகை உயர்வு: உழவர் உதவி மைய வாட்ஸ்அப் எண்ணை அறிவித்தது தமிழக அரசு!
TN Govt Increases Paddy Procurement Incentive Launches WhatsApp Helpline for Farmers
நடப்பு 2026–2027-ஆம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் பருவத்தில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நெல்லுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தித் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையுடன் சேர்த்துத் தமிழக அரசு வழங்கும் கூடுதல் ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, சன்னரக நெல்லுக்கான ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு ரூ.156-லிருந்து ரூ.289 ஆகவும், பொதுரக நெல்லுக்கான ஊக்கத்தொகை ரூ.131-லிருந்து ரூ.159 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், தற்சமயம் சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,750 வீதமும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,600 வீதமும் நிர்ணயிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் கடந்த செப்டம்பர் 1 முதல் கொள்முதல் பருவம் தொடங்கப்பட்டு, செப்டம்பர் 3 முதற்கொண்டு நேரடியாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 20,196 விவசாயிகளிடமிருந்து 1.17 லட்சம் மெட்ரிக் டன் நெல் வெற்றிகரமாகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் எவ்வித முறைகேடுகளும் இன்றி, முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் பணிகள் நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, விரிவான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) அடங்கிய அரசாணையைத் தமிழக அரசு கடந்த செப்டம்பர் 15 அன்று வெளியிட்டது.
விவசாயிகள் தங்களது விளைபொருட்களைச் சிரமமின்றி விற்பனை செய்வதை உறுதிசெய்யப் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலோ அல்லது லஞ்சம் மற்றும் சட்டவிரோதப் பண வசூல் போன்ற முறைகேடுகள் நடந்தாலோ, அதுகுறித்து விவசாயிகள் உடனடியாகப் புகார் தெரிவிக்கத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் சிறப்பு "உழவர் உதவி மையம்" உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 9500801465 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) புகார் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவையைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது புகார்களைப் பதிவு செய்து உரியத் தீர்வைப் பெறலாம் என அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
English Summary
TN Govt Increases Paddy Procurement Incentive Launches WhatsApp Helpline for Farmers