வீ த லீடர்ஸ்' விரைவில் அரசியல் கட்சியாக மாறும் - அண்ணாமலை அதிரடி!
Annamalai Criticizes CM London Trip Announces We The Leaders Will Become a Political Party
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் சிறப்பு விருது வழங்கும் விழா மகா சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஜி.ராஜ்குமார் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில், 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "தமிழக முதல்வர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சொன்றது முற்றிலும் தேவையற்ற ஒன்றாகும். அதற்குப் பதிலாக கோவை, மதுரை போன்ற நகரங்களுக்கு நேரில் வந்து, இங்குள்ள உள்ளூர் தொழிலதிபர்களைச் சந்தித்து அவர்களின் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வழிவகைகளைச் செய்திருக்க வேண்டும். தொழிலை விரிவுபடுத்த அரசு 50 சதவீதம் மானியம் வழங்கும் என உறுதி அளித்தாலே இங்கு தொழில் வளர்ச்சி பெருமளவில் மேம்படும்; நம் நாடும் பொருளாதாரத்தில் உச்சமடையும்" என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறையை முற்றிலும் அகற்றுவோம். சமீபத்தில் நடந்த மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா, சினிமா திரையரங்கில் பிளாக் டிக்கெட் விற்பது போன்ற சூழலில்தான் நடந்தது. பச்சை மற்றும் சிவப்பு நிற டோக்கன் வைத்திருப்பவர்களுக்குத் தனித்தனி இட ஒதுக்கீடு வழங்கி, மாட வீதிகளை வி.ஐ.பி-க்களின் வாகனக் காப்பகமாக மாற்றியிருந்தனர். மேலும் ஸ்ரீரங்கம் கோவில் முன்பாக உள்ள 'கடவுள் இல்லை' என்ற வாசகங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான குரலாகும்" என்றார்.
மேலும், "எங்கள் அமைப்பில் உள்ள ஒவ்வொருவருமே ஒரு தலைவர் தான். இதுவே உண்மையான புரட்சி. இந்த 'வீ த லீடர்ஸ்' அமைப்பு மிக விரைவில் ஒரு அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியாக உருவெடுக்கும். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் பேசிய கருத்துகளுக்கு முதலமைச்சர் உடனடியாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்க வேண்டும். அடுத்தகட்டமாக எங்களது இயக்கம் சார்பில் மகளிர்களுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்ட மகளிர் மாநாடு விரைவில் நடத்தப்படும்" என்றும் அவர் உறுதியளித்தார்.
English Summary
Annamalai Criticizes CM London Trip Announces We The Leaders Will Become a Political Party