அவிநாசி | நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்! காரணம் என்ன?
Avinashi public road blockade protested
அவிநாசி சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அதனை தடுக்கும் வகையில் வேகத்தடை, சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவிநாசி - சேவூர் சாலையில் பனியன் நிறுவன வாகனம் பணியாளர்களை ஏற்றி செல்லும் போது வாகனங்களை முந்தி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
அவிநாசி-சேவூர் சாலை, சுற்று வட்டார பகுதியில் ஒரு முக்கிய பிரதான சாலையாக உள்ளது. இதில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகள் பள்ளி வாகனங்கள் செல்கின்றன.
திருப்பூர் அருகாமையில் இந்த சாலை அமைந்துள்ளதால் 200க்கும் மேற்பட்ட பனியன் நிறுவன வாகனங்கள் தொழிலாளர்களை ஏற்றுக்கொண்டு சென்று வருகிறது.
காலை, மாலை, இரவு நேரங்களில் இந்த வாகனங்கள் அதிவேகமாக சென்று வருவதால் ஒன்றை ஒன்று முந்தி செல்வதாலும் அடிக்கடி விபத்து நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதனால் பாதசாரிகள், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்லும்போது விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைக்க வேண்டும், வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த மறியல் போராட்டத்தினால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டது.
English Summary
Avinashi public road blockade protested