அசிஸ்டெண்ட் முதன்மைத் தேர்வு வினாத்தாள் குளறுபடி..7 மதிப்பெண் வழங்க மாணவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!
Assistant Main Exam Question Paper Confusion Students Federation demands 7 marks
அசிஸ்டெண்ட் முதன்மைத் தேர்வு வினாத்தாள் குளறுபடிகளால்ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கவனத்தில் கொண்டு அனைவருக்கும் ஏழு (7) சலுகை மதிப்பெண்கள் வழங்கி தகுதிப் பட்டியலை வெளியிட வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :27.04.2025 அன்று நடந்து முடிந்த அசிஸ்டெண்ட் முதன்மை எழுத்துத் தேர்வில் கொடுக்கப்பட்ட வினாத்தாளில் ஏழு (7) வினாக்கள் தவறாக கேட்கப்பட்டுள்ளது. தவறான விடை, ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள், வினாக்கள் தெளிவாகக் கேட்கப்படாமல் தேர்வர்களை குழப்பத்திற்கு ஆளாக்கியுள்ளது.
தவறுகளால் தேர்வர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முதன்மைத் தேர்வு, தகுதித் தேர்வு என்பதால், வினாத்தாள் உருவாக்கியவர்கள் செய்த தவறுகளால் அப்பாவித் தேர்வர்கள் அடுத்தக் கட்ட தேர்வுக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .
இக்குழப்பங்கள் மற்றும் தவறுகளால் தேர்வர்கள் குறிப்பிட்ட அவ்வினாக்களை எழுதச் செய்வதா? வேண்டாமா? என்ற குழப்பத்திற்கு ஆளாகினர். இந்த பதற்றம் நன்கு தெரிந்த வினாக்களைக்கூட சரியாக எழுத முடியாத நிலைக்கு இட்டுச் சென்று, தேர்வு நேரம் வீணாக விரையமானது.
மேலும், வினாக்கள் தெளிவாக புரிந்து கொள்ளும்படி இருந்திருந்தால் அதனை எழுதி அதற்கான முழு மதிப்பெண்களைப் பெற்று அடுத்தக்கட்ட தேர்வுக்கான தகுதி வாய்ப்பை அதிகரித்து இருக்கும். மாறாக தவறாக உள்ளதென அவ்வினாக்களை தற்போது நீக்கம் செய்ய முடிவெடுத்தால் தகுதிக்கான மதிப்பெண் சதவீதத்தில் 0.25 முதல் 0.50 என்ற அளவில் மட்டுமே மாற்றத்தை கொண்டு வரும். மேற்கண்ட குளறுபடிகளால் பல மதிப்பெண்களை நெகட்டிவ் அடிப்படையில் இழக்க நேரிடும்.
முக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற தகுதித் தேர்வுகளில், தெளிவான வினாத்தாள் இருந்தால்தான் போட்டியாளர்களின் மனநிலை சீராக இருக்கும். மேற்கண்ட வினாத்தாள் குளறுபடிகளால் தேர்வர்கள் பீதிக்கு ஆளாகி ஒரு குழப்ப மனநிலையில் தேர்வை எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள் என்பதை யாராலும் மறுக்க இயலாது. விடைகள் வெளியிட்ட அடுத்த சில மணி நேரங்களில் பலரிடம் இருந்து ஆட்சேபனைகள் அனுப்பப்பட்டுள்ளதே இதற்கு சான்று.
எனவே, அனைத்து தேர்வர்களுக்கும், மேற்கண்ட வினாக்களுக்கான முழு மதிப்பெண்களையும் வழங்கி தகுதிப் பட்டியலை இறுதிசெய்ய வேண்டும். மாறாக விடைகளில் மாற்றம், வினாக்கள் நீக்கம் போன்ற நடவடிக்கைகள் பல போட்டியாளர்களை அடுத்தக்கட்ட தேர்வுக்கு தகுதி பெற இயலாத நிலைக்கு இட்டுச் சென்று அவர்களை போட்டியில் இருந்து வெளியேற்றி விடும்.
இத்தகைய குளறுபடிகளுக்கு தேர்வர்கள் எவ்விதத்திலும் பொறுப்பாக இயலாத நிலையில், அரசு இதற்கு தார்மீக பொறுப்பேற்று, தேர்வு எழுதிய அனைவருக்கும் மேற்கண்ட குழப்பமான, தெளிவில்லாத மற்றும் தவறான ஏழு (7) வினாக்களுக்குமான முழு மதிப்பெண்களை பாரபட்சமின்றி தேர்வர் அனைவருக்கும் வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் காவல்துறை ஊர்க்காவல் படைத் தேர்வு வினாத்தாளால் ஏற்பட்ட குளறுபடிகளை, மாண்புமிகு நீதிமன்றம் இதுபோன்ற ஒரு அணுகுமுறையுடன் தீர்ப்பு வழங்கியுள்ளதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
மேலும், இது தகுதித் தேர்வு என்பதால், இந்தச் சலுகை எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. அப்பாவி தேர்வர்களை இத்தகைய வினாத்தாள் பழிவாங்கி விடாமலும் தேர்வு செய்யப்படும் பதவிக்கான தகுதியான நபர்களை உருவாக்க வேண்டும் என்பதனை உணர்ந்து தவறான ஏழு கேள்விக்கு தேர்வர்கள் அனைவருக்கும் ஏழு மதிப்பெண் அளித்து தேர்ச்சிப்பட்டியலை வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறோம் என புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Assistant Main Exam Question Paper Confusion Students Federation demands 7 marks