ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏ.க்களுக்கு ஆபத்தா...? - இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி நீதிமன்றத்தில் அதிமுக அதிரடி வழக்கு...!
Are 4 MLAs who resigned danger AIADMK moves court stop by elections
தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம், தற்போது நீதிமன்ற விசாரணையின் மூலம் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.கடந்த மே 13-ஆம் தேதி நடைபெற்ற அரசின் மீதான பெரும்பான்மை வாக்கெடுப்பின்போது, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, கட்சிக் கொறடா உத்தரவை மீறியதாக குற்றம்சாட்டி, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார்.இந்த சூழலில், மதுராந்தகம் தொகுதி உறுப்பினர் மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி உறுப்பினர் ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி உறுப்பினர் சத்தியபாமா மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி உறுப்பினர் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்ததுடன், பின்னர் தவெக-வில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து காலியானதாக அறிவிக்கப்பட்ட நான்கு தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.இதற்கிடையே, தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும் நிலையில் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது சட்ட ரீதியாக ஏற்கத்தக்கதல்ல என்று வாதிட்டு, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால், சம்பந்தப்பட்ட நான்கு உறுப்பினர்களும் முன்கூட்டியே அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு பின்னர் ராஜினாமா செய்து புதிய கட்சியில் இணைந்திருப்பது திடீர் முடிவு அல்ல என வாதிட்டார்.
அரசியல் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கட்சிக் கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததாக குற்றம்சாட்டப்பட்ட 25 உறுப்பினர்களில் 21 பேரின் விளக்கத்தையும் மன்னிப்பு கோரிக்கையையும் அதிமுக பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கைவிடப்பட்டதாகவும் கூறினார்.மேலும், ராஜினாமா செய்த நான்கு உறுப்பினர்களும் தங்களது விருப்பத்தின் பேரிலேயே பதவியை துறந்துள்ளதாகவும், இருப்பினும் தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சட்டமன்ற விதிகளின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவுகளை சபாநாயகர் மேற்கொள்வார் என்றும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.இருதரப்பினரின் வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், தொடர்புடைய அனைத்து மனுக்களையும் ஒருங்கிணைத்து விசாரிக்க முடிவு செய்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.தமிழக அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த வழக்கின் தீர்ப்பை அரசியல் கட்சிகளும் சட்ட வல்லுநர்களும் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Are 4 MLAs who resigned danger AIADMK moves court stop by elections