விமர்சனக் குரல்களை கைது செய்து ஒடுக்குவதா...? - முதல்வர் விஜய்க்கு ‘வி த லீடர்ஸ்’ அண்ணாமலை கண்டனம்...!
Arrest and suppress critical voices We Leaders Annamalai condemns Chief Minister Vijay
ஆளும் கட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் ஒடுக்குவது ஜனநாயகத்தின் அடிப்படைத் தன்மைக்கு எதிரானது என்று ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு எனக் குறிப்பிட்டுள்ள அவர், கடந்த காலத்தில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக மக்களிடையே உருவான அதிருப்திக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் அதிகாரத்தின் மீதான ஆணவத்துடன் மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் புறக்கணித்ததுதான் என தெரிவித்துள்ளார்.

அதே நிலை தற்போதைய ஆட்சியிலும் உருவாகி வருகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சமூக வலைத்தளங்களில் ஆளும் கட்சியினரின் கருத்துகளுக்கு எதிராக விமர்சனம் தெரிவித்ததாகவும், கருத்து வேறுபாடு கொண்டதாகவும் கூறி 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தனது குடும்பத்தை தகாத வார்த்தைகளால் விமர்சித்த த.வெ.க. தொண்டருக்கு பதிலளித்த வி த லீடர்ஸ் அமைப்பின் தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை காவலர்கள் கைது செய்திருப்பது கவலை அளிப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் தனிநபரை அவமதிக்கும் வகையிலான கருத்துகள் மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கட்டுப்படுத்துவது அவசியமான நடவடிக்கையே. அதேவேளையில், ஆட்சியின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்கும் விமர்சனக் குரலகளை வழக்கு, கைது போன்ற அதிகார நடவடிக்கைகளால் அச்சுறுத்துவது ஜனநாயக நடைமுறைக்கு உகந்ததல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் பாராட்டைப் பெற வேண்டும் என்ற நோக்கில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதற்கு இடமளிக்கக் கூடாது என்றும், அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் என்பவர் ஒரு குறிப்பிட்ட கட்சியின் தலைவராக மட்டும் இல்லாமல், தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவான நிர்வாகத் தலைவராக செயல்பட வேண்டிய பொறுப்பு கொண்டவர் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.ஆட்சிக்கு எதிரான கருத்துகள், கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் ஜனநாயகத்தின் இயல்பான வெளிப்பாடுகள்.
அவற்றை எதிர்கொள்வதற்குப் பதிலாக வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் குரல் எழுப்புபவர்களை அச்சுறுத்தும் நிலை தொடர்வது வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, விமர்சனக் குரல்களை ஒடுக்கும் போக்கிற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்து, மாற்றுக் கருத்துகளுக்கும் ஜனநாயக ரீதியான விமர்சனங்களுக்கும் உரிய மதிப்பும் இடமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Arrest and suppress critical voices We Leaders Annamalai condemns Chief Minister Vijay