எல்லைப் பிரச்சினைகள் முதல் முக்கிய ஆலோசனைகள் வரை...! சென்னை மாநாட்டில் பங்கேற்கிறார் அமித்ஷா....!
From border issues important discussions Amit Shah to participate in Chennai conference
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள 31-வது தென் மாநில முதல்வர்கள் மாநாடு சென்னை அருகே 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித்ஷா நாளை இரவு சென்னை வருகிறார்.
சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள பிஷர்மேன்ஸ் கோவ் விடுதியில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் தமிழகம், புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் முதல்வர்கள், தலைமை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

தென் மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், மாநிலங்களுக்கு இடையேயான சுமூகமான உறவை தொடர்ந்து பேணுவது தொடர்பாக மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், மாநிலங்களின் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுப்பது, கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பை தீவிரப்படுத்துவது, மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென் மாநிலங்கள் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களுக்கு ஒருங்கிணைந்த தீர்வுகளை உருவாக்குவது குறித்தும் இந்த மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
From border issues important discussions Amit Shah to participate in Chennai conference