தனியார் கல்லூரிகளிடம் விலை போனதா திமுக அரசு? அதிர்ச்சி வீடியோ - அதிரவைக்கும் அறப்போர் இயக்கம்! - Seithipunal
Seithipunal


அண்ணா பல்கலைக்கழகம், மேற்கொண்ட இணைவு அங்கீகார ஆய்வின்படி(Affiliation Inspection), தனியார் பொறியியல் கல்லூரிகள் வாரியாக (Engineering College) இருக்கும் பேராசிரியர்கள் குறைபாடு மற்றும் ஆய்வக குறைபாடுகள் பட்டியலை உடனே வெளியிட வேண்டும் என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்த அதன் செய்திக்குறிப்பில், "சுமார் 2 இலட்சம் மாணவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தின் எதிர்காலம் சம்மந்தபட்ட பிரச்சனையில், முதல் அமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கோவி.செழியன் மற்றும் உயர்கல்வித்துறை செயலர் திருP.சங்கர்IAS அவர்களுக்கு அக்கறை இல்லை என்பது சமீபத்திய அறிக்கைகள் மூலம் தெரிவிக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு(Engineering College), 2025-26 ஆம் ஆண்டுக்கான இணைவு அங்கீகார ஆய்வு (Affiliation Inspection) சமீபத்தில் நிறைவுற்றது. மேற்கண்ட தனியார் கல்லூரிகளின் குறைபாடுகள் மற்றும் அவற்றின் மோசமான தற்போதைய நிலவரம் பற்றி அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரிந்திருக்கும். பொறியியல் கல்லூரிகள் குறைகளை சரி செய்ய ஏற்கனவே அறிவுரை மற்றும் அறிவிப்பு வழங்கிய நிலையில் மீண்டும் மீண்டும் கால அவகாசம் வழங்குவது ஏன்?  

நடப்பு கலந்தாய்வில் (Counseling) பங்கு கொள்ளும் இலட்சக்கணக்கான மாணவர்கள் ஒவ்வொரு வரும், தாங்கள் சேர விரும்பும் பொறியியல் கல்லூரிகளில், பேராசிரியர்கள் நிலை மற்றும் ஆய்வங்கள் நிலை போன்ற கட்டமைப்பை பற்றி தெரிந்து கொள்வது அடிப்படை உரிமை.  அதை உறுதி செய்வது உயர்கல்வித்துறையின் அடிப்படை பொறுப்பு.

இரு வாரங்களுக்கு முன்பு சுமார் 400 தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு, குறைபாடுகளை சரி செய்ய அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக மின்-அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. கடந்த சில தினங்களாக, சுமார் 141 பொறியியல் கல்லூரிகளுக்கு குறைகளை சரி செய்ய மேலும் 45 நாட்கள், அண்ணா பல்கலைக்கழகம் கெடு விதித்துள்ளது என்று கூறப்படுகிறது. இது போன்ற குளறுபடியான அறிவிப்புகள் மாணவர்களையும், பெற்றோர்களையும் முழுவதுமாக ஏமாற்றும் செயல்.

இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு 14.07.2025 துவங்கி, மூன்று சுற்றுகளுக்கு பிறகு, 26.08.2025 அன்று நிறைவடைகிறது. அதாவது கலந்தாய்வு(Counseling) 43 நாட்கள் நடைபெறுகிறது. அதற்கு பிறகு பொறியியல் கல்லூரிகளின் முதல் ஆண்டு பிரிவு செயல்படத் துவங்கும். பேராசிரியர்கள் மற்றும் ஆய்வக வசதி குறைபாடு உடைய பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் கல்வியின் தரமும், எதிர்காலமும் என்ன ஆகும் என்பது பெரிய கேள்வி. 

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்த கால அவகாசமான 45-நாட்களுக்குள் மாணவர்கள் சேர்க்கையே முடிந்து, கல்லூரிகள் இயங்கும் நிலையில், எப்படி கல்லூரிகள் தங்கள் குறைபாடுகளை சரி செய்யும்?. ஒரு வேலை குறைகளை சரி செய்யாத பொறியியல் கல்லூரிகள் மீது அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க முயன்றால், மாணவர்கள் சேர்க்கையை காரணம் காண்பித்து, தங்கள் மீதான நடவடிக்கையில் இருந்து தப்பித்து கொள்ளும் அபாயம் இருக்கிறது. இதற்காகவே அண்ணா பல்கலைக்கழகம், தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு கால அவகாசம் கொடுத்துள்ளது போன்று இருக்கிறது. 

ஏற்கனவே, தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பேராசிரியர்கள் மோசடி சார்பாக, கடந்த ஆண்டு எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேராசிரியர்கள் சரிபார்க்க அழைக்கப்பட்டது. இந்த ஆண்டு இணைவு அங்கீகார ஆய்வு துவங்கும் போது எச்சரிக்கப்பட்டது. மீண்டும் தற்போழுது 141 தனியார் பொறியியல் கல்லூரிகள் குறைபாடுகள் என அறிவிப்பு செய்யப்படுகிறது. முற்றிலும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் தனியார் பொறியியல் கல்லூரிகளையும், நிர்வாகத்தையும் காப்பாற்றும் நோக்கத்திலேயே அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் செயல்படுகிறது.

பொறியியல் கல்லூரிகளில் வாரியாக குறைபாடுகளை தற்பொழுது அறிவிப்பு செய்தால், கலந்தாய்வில் (Counseling)பங்கு கொள்ளும் மாணவர்கள், தங்கள் படிப்பிற்கு உரிய தகுதியான பொறியியல் கல்லூரிகளில் சேர இயலும். மாறாக அந்த பட்டியலை ஒளித்து வைத்து கொண்டு, அறிவிப்பு கொடுத்திருக்கிறோம், எச்சரிக்கை செய்கிறோம், விரைவில் சரி செய்ய கால அவகாசம் கொடுக்கிறோம் என்பது மாணவர்களுக்கு மற்றும் மற்றும் பெற்றோர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் செய்யும் பெரும் துரோகம். அத்துடன் மாணவர்களின் எதிர்காலத்தை குழி தோண்டி புதைப்பதற்கு சமம்.

கடந்த ஆண்டு இதே ஜூலையில் (23.07.2024), அறப்போர் இயக்கம், 352 பேராசிரியர்கள் போலியாக, 972 இடங்களில் முழுநேரப் பேராசிரியராக பணிபுரிவதாக கணக்கு காண்பிக்கபட்டு மோசடியாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு அங்கீகாரம் (Affiliation) பெற்றுள்ளனர் என்றும், இந்த மோசடியில் சுமார் 224 தனியார் பொறியியல் கல்லூரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும் வெளிப்படுத்தியிருந்தோம். அதனை தொடர்ந்து கண்காணித்தும் வருகிறோம்.

அண்ணா பல்கலைக்கழகம், இன்று வரை, அந்த மோசடியில் ஈடுபட்ட தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீதோ, மோசடியாக அங்கீகார பரிந்துரை செய்த ஆய்வுக்குழு மீதோ எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டும், பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்களின் நிலை மற்றும் ஆய்வகங்களின் நிலை பற்றிய ஆய்வறிக்கை இன்று வரை வெளியிடவில்லை.

எனவே, அரசுக்கு, அறப்போர் இயக்கம் கோருவது,
1. உடனடியாக பொறியியல் கல்லூரிகள் வாரியாக, பேராசிரியர்கள் மற்றும் ஆய்வக குறைபாடுகள் பற்றி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
2. மோசமான குறைபாடுகள் உடைய கல்லூரிகள் இந்த ஆண்டு கலந்தாய்வில் இருந்து நீக்க வேண்டும்.
3. மோசமான குறைபாடுகள் உடைய கல்லூரிகளில், தற்பொழுது பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் உறுதி செய்யவேண்டும்.
4. Conditional Affiliation எனப்படும் நிபந்தனை இணைவு வழங்கப்பட்ட கல்லூரிகள் பட்டியல் உடனே வெளியிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arappor Iyakkam DMK Govt Engineering College Affiliation Inspection


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->