'கொஞ்சம் நில்லுங்கப்பா... Taste பண்ணிக்கிறேன்'... வழிமறித்து கரும்பை ருசித்த யானை! லாபகமாக தப்பிய ஓட்டுனர்...!
An elephant blocked road and tasted sugarcane driver escaped gracefully
ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம்-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் ''சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை'' அமைந்துள்ளது. இது அடர்ந்த வனப்பகுதியில் அமைந்த நெடுஞ்சாலை.மேலும், வனப்பகுதியிலுள்ள யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடமாடுவது வழக்கமான ஒன்று.

இந்நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் விளையும் கரும்புகள் வெட்டப்பட்டு லாரிகளில் ஏற்றப்பட்டு வனப்பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.இதில் லாரியிலிருந்து சிதறி கீழே விழும் கரும்பு துண்டுகளை தின்பதற்காக யானைகள் சாலையை நோக்கி படையெடுக்கின்றன.
இந்நிலையில் பண்ணாரி வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் கரும்பு துண்டுகளை தின்று பழகியதால் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து கரும்பு கட்டுகளை தேடுவது தொடர்கதை ஆகி வருகிறது.இந்த சூழலில்,பண்ணாரி அம்மன் கோவில் அருகே திம்பம் மலை அடிவாரத்தில் சாலையில் நடமாடிய ஒற்றை யானை அந்த வழியாக வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி கரும்பு கட்டு இருக்கிறதா? என ஒவ்வொரு வாகனங்களை நிறுத்தி பார்த்து வந்தது.
அப்போது அந்த வழியாக கர்நாடகாவில் இருந்து கரும்பு கட்டுகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியை இந்த ஒற்றை யானை வழிமறித்து தடுத்து நிறுத்தியது. அதன் பிறகு தனது தும்பிக்கையால் கரும்பு கட்டுகளை ருசி பார்த்தது. இதில் யானை பக்கவாட்டில் சென்றதும் ஓட்டுநர் லாபகரமாக லாரியை இயக்கி யானையிடமிருந்து தப்பினார்.
இதைத்தொடர்ந்து அந்த வழியாக வந்த தேங்காய்மட்டை பாரம் ஏற்றி வந்த லாரியையும் தடுத்து நிறுத்தி கரும்பு உள்ளதா என அந்த யானை தேடியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரம் சாலையில் நின்ற அந்த ஒற்றை யானை மீண்டும் வனப்பகுதியில் சென்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
English Summary
An elephant blocked road and tasted sugarcane driver escaped gracefully