உளுந்தூர்பேட்டையில் துணிகரம்; மயக்க பொடி தூவி பெண்ணிடம் கொள்ளை முயற்சி; வசமாக சிக்கிய ஆந்திரா இளைஞர்..!
An Andhra Pradesh youth who attempted to rob a woman in Ulundurpettai by spraying her with a sedative powder has been arrested
உளுந்தூர்பேட்டையில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் பெண் மீது மயக்க பொடி தூவி ரூ. 3 லட்சம் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற ஆந்திர மாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்த நகையை மீட்பதற்காக வங்கி கட்டிடத்தில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் ரூபாய் 3 லட்சம் பணத்தை எடுத்துள்ளதோடு, வங்கிக்குள் சென்று நகையை மீட்பதற்காக பணம் செலுத்தும் படிவத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது குறித்த பெண்ணை நோட்டமிட்ட 27 வயதான இளைஞர் ஒருவர் மகாலட்சுமி மீது திடீரென மயக்க பொடியை தூவியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெண்ணின் உடலில் அரிப்பு ஏற்பட்டதால் அருகில் இருந்த அவரது உறவினரிடம் பணப் பையைக் கொடுத்துள்ளார். பின்னர், மயக்க பொடி தூவப்பட்ட இடத்தை தேய்த்தவாறு பின்னால், திரும்பிப் பார்த்த போது அங்கு, நின்று கொண்டிருந்த இளைஞரை பார்த்து அருகில் இருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அங்கு இருந்தவர்கள் குறித்த இளைஞரை பிடித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்து, உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் குறித்த இளைஞரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இதன்மூலம், கொள்ளையடிக்க முயன்ற நபர் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ரவி என்பது தெரிய வந்துள்ளது. இந்த இளைஞன் மகாலட்சுமி, ஏடிஎம்-லிருந்து பணம் எடுத்தபோதிலிருந்தே அவரைக் கண்காணித்து வந்ததாகவும், எப்படியாவது அவரிடம் இருந்து 03 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடிக்க முயன்றதையும் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
An Andhra Pradesh youth who attempted to rob a woman in Ulundurpettai by spraying her with a sedative powder has been arrested