தமிழகத்தில் டைடல், மினி டைடல் பார்க் அமையவுள்ள இடங்கள்; ஆளுநர் உரையில் தகவல்..!
The Governor address included information about the locations where Tidal and Mini Tidal Parks will be established in Tamil Nadu
தமிழகத்தில் புதிய டைடல் மற்றும் மினி டைடல் பூங்காக்கள் நிறுவப்படவுள்ளதாக தமிழக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை, திருச்சி, ஓசூர், காரைக்குடி, விருதுநகர், நெல்லை, குமரி, ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை, கரூர், ஊட்டி, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் டைடல் மற்றும் மினி டைடல் பூங்காக்கள் நிறுவப்படவுள்ளன.
தொழில் துறை முதலீடுகள் தொடங்கி மின் திட்டங்கள் வரை தமிழக ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் கீழ்வருமாறு;
தொழில் துறையில் கடந்த 05 ஆண்டுகளில் ரூ.12.16 லட்சம் கோடிக்கும் மேலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, மாநிலமெங்கும் தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களுடன் 1,176 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் 36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

2025-ஆம் ஆண்டில் மட்டும் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மின்னணுவியல் பொருட்கள் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
மதுரை, திருச்சி, ஓசூர், காரைக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாமக்கல் திருவண்ணாமலை, கரூர், ஊட்டி, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் புதிய டைடல் மற்றும் மினி டைடல் பூங்காக்கள் நிறுவப்படவுள்ளன.
சென்னை கிண்டியில் தொடங்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை 1,000 படுக்கைகள், 15 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் சென்னையில் அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் பயனாளிகளுக்கான ஆண்டு வருமானம் உயர்த்தப்பட்டு, ரூ.5 லட்சம் வரையில் மருத்துவக் காப்பீடு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், 2,053 சிகிச்சை முறைகள் அங்கீகரிக்கப்பட்டு, கடந்த 05 ஆண்டுகளில் ரூ.6,769 கோடி மதிப்பிலான காப்பீட்டுத் தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 5 ஆண்டுகளில் 6,871 புதிய பேருந்துகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், 5,216 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
காற்று மாசுபடுவதையும், கார்பன் தடங்களையும் குறைக்கும் முயற்சியாக தமிழக வரலாற்றில் முதன்முறையாக 380 மின் பேருந்துகள் ரூ.288 கோடியில் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை நியமன முறையில் உறுப்பினராக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் 3,631 மாற்றுத் திறனாளிகள், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாகி, தமிழகத்தின் வளர்ச்சியை வடிவமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் உடன்குடி, எண்ணூர் அனல்மின் நிலையங்களில் 2,640 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட புதிய அலகுகள் அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. மேலும், 520 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட புனல் மின் நிலையங்கள், மின்கலன் சேமிப்பு அமைப்புகள் மற்றும் நீரேற்று மின் திட்டங்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்படுகின்றன.

எண்ணூர் அனல் மின் நிலைய 02, 03 மற்றும் தூத்துக்குடி அனல் மின் திட்டம் விரிவாக்கம் ஆகியவையும் செயல்படுத்தப்பட உள்ளன. இவற்றின் மூலம் வரும் ஆண்டுகளில் தமிழகத்தின் மின் உற்பத்தி திறன் 7,000 மெகாவாட்டுக்கும் அதிகமாக உயரும்.
சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு இயற்கை சார்ந்த அனுபவங்களை அளிக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படஉள்ளது. இதுதவிர, மாமல்லபுரத்தில் நந்தவனம் மரபுசார் பூங்காவும், ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஒரு புதிய பூங்காவும் அமைக்கப்படவுள்ளன.
அத்துடன், மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளின் நீரில் தனது நியாயமான பங்கைப் பெறுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருகிறது. நமக்குரிய நியாயமான நீர்ப்பங்கீட்டில் நாம் ஒருபோதும் சமரசம் செய்யமாட்டோம் என்றும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
The Governor address included information about the locations where Tidal and Mini Tidal Parks will be established in Tamil Nadu