'ஆளுநர் உரை எனும் பெயரில் உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற தகவல்களை அறிக்கையாகத் தயாரித்திருப்பது கண்டனத்திற்குரியது'; திமுக அரசை விமர்சித்துள்ள டிடிவி தினகரன்..!
DTV Dhinakaran says it is reprehensible that a report containing false and baseless information has been prepared in the name of the Governors address
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே முடியாத சூழல் நிலவிவரும் நிலையில், அது குறித்து எந்த விவரங்களும் ஆளுநர் உரையில் இடம்பெறாமல் தவிர்க்கப்பட்டிருப்பது முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்;
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''தமிழக அரசின் செயல் திட்டங்களும், அதனால் மக்களுக்குக் கிடைக்கும் பயன்களும் நிறைந்திருக்க வேண்டிய ஆளுநர் உரை, தமிழகத்தில் பாலாறும், தேனாறும் பெருக்கெடுத்து ஓடுவதாக திமுகவினர் நாள்தோறும் காணும் கனவைத் தூக்கிச் சுமந்திருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம் கூலிப் படைகளின் அட்டூழியம் என தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே முடியாத சூழல் நிலவிவரும் நிலையில், அது குறித்து எந்த விவரங்களும் ஆளுநர் உரையில் இடம்பெறாமல் தவிர்க்கப்பட்டிருப்பது முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலாகும்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மின்வாரிய மற்றும் போக்குவரத்துத் துறை ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள், தொழில்முனைவோர்கள் என அனைத்து தரப்பினரும் அவரவர் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரிப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், எல்லார்க்கும் எல்லாம் என்ற பாரதிதாசனின் வரிகளுக்கு ஏற்ப அரசு செயல்படுவதாக கூறி பெருமை பேசுவது கேலிக்கூத்தானது.
அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, கட்டணங்களும், வரிகளும் பன்மடங்கு அதிகரிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் என திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழக மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவோ, அதற்கான வழிவகைகளை ஏற்பாடு செய்யவோ எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் திமுக அரசின் பெருமைகளை மட்டுமே உள்ளடக்கிய ஊடகங்களிலும், நாளிதழ்களில் வெளிவரும் விளம்பரமாக அமைந்திருக்கும் ஆளுநர் உரை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வழங்கிய தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் தனியார்த் துறையில் 3 லட்சம் அளவிற்கான வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கியிருப்பதாக ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருப்பதன் மூலம் தன் நிர்வாகத் திறமையின்மையையும், தோல்வியையும் ஒப்புக் கொண்டதாகவே பார்க்க வேண்டியுள்ளது.
அதோடு தமிழகத்தில் பன்மடங்கு உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தால் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதோடு, தொழில் தொடங்குவதாக ஒப்புக்கொண்ட பன்னாட்டு நிறுவனங்களும் அண்டை மாநிலத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் 36 லட்சம் வேலைவாய்ப்பு உருவாகியிருப்பதாகவும் கூறியிருப்பது "சீனிச் சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா" என்ற வரிகளைத்தான் நினைவுபடுத்துகிறது.

காவிரியின் குறுக்கே மேகதாது அணையையும், முல்லைப் பெரியாற்றில் புதிய அணையையும் கட்டியேத் தீருவோம் என இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கர்நாடக காங்கிரஸ் மற்றும் கேரள கம்யூனிஸ்ட் பிடிவாதம் பிடித்துவரும் நிலையில், அவர்களுக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிட முடியாத முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரசு, நதிநீர் பங்கீட்டில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளையும் ஏமாற்றும் செயலாகும்.
நூற்றாண்டு கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப்பேரவையில் ஆளுநர் உரை எனும் பெயரில் உண்மைக்கு புறம்பான, துளியளவும் ஆதாரமற்ற தகவல்களை அறிக்கையாகத் தயாரித்திருக்கும் திமுக அரசு, அதனை வாசிக்குமாறு ஆளுநரை நிர்பந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அதே நேரத்தில், நீண்ட நெடிய பாரம்பரியமிக்க சட்டப் பேரவையின் மரபுகளை மாற்றக் கோருவது ஆளுநருக்கும் அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்'' என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
DTV Dhinakaran says it is reprehensible that a report containing false and baseless information has been prepared in the name of the Governors address