ஜன நாயகன் வெளியாவதில் சிக்கல்; தணிக்கை சான்றிதழ் வழக்கில் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு..!
The verdict in the Jananayagan censorship certificate case has been postponed again
ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜன நாயகன். பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 09-ஆம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. படத்திற்கான தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. படத்திற்கு விரைந்து சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி படக்குழு
உயர்நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து ஜனவரி 9 அன்று தனி நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அத்தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றமே ஜனவரி 20 அன்று இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பொங்கலன்று உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜன நாயகன் தணிக்கை விவகார வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. காலை 11.30 முதல் நான்கு மணிவரை தயாரிப்பு நிறுவனம், தணிக்கை வாரியம் என இருதரப்புகளும் மாறி மாறி வாதங்களை முன் வைத்தன. தொடர்ந்து இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் தீர்ப்பை தள்ளிவைத்தது. இதனால், ஜன நாயகன் வெளியீடு இன்னும் தள்ளிப்போகும் சூழல் உருவாகி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
The verdict in the Jananayagan censorship certificate case has been postponed again