சென்சார் போர்டு vs தயாரிப்பாளர்: ஜனநாயகன் வழக்கில் பரபரப்பு விசாரணை...!
Censor Board versus Producer Sensational hearing jananayagan case
விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்தப் படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என சென்சார் போர்டு கடந்த 5-ஆம் தேதி பரிந்துரை செய்தது. இந்த முடிவால் அதிருப்தியடைந்த தயாரிப்பு நிறுவனம் கே.வி.என். புரொடக்ஷன்ஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, “மறுஆய்வு குழுவுக்கு அனுப்பிய சென்சார் போர்டு தலைவர் உத்தரவு சட்டப்பூர்வமற்றது” எனக் கூறி அதை ரத்து செய்தார். மேலும், ‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்புக்கு எதிராக சென்சார் போர்டு உடனடியாக மேல்முறையீடு செய்தது. அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் படம் வெளியீடு கேள்விக்குறியான நிலையில், தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியது.
உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்து, படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் தனது மனுவில் கோரியது. இந்த மனு கடந்த 15-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் “இந்த வழக்கை இங்கே விசாரிக்க விருப்பமில்லை” என தெரிவித்ததுடன், சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுகுமாறு கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்த டிவிஷன் பெஞ்ச் உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் மேல்முறையீடு செய்தது. அந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்த விசாரணையில், தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சதீஸ் பராசரன் மற்றும் பிரதீப் ராய் ஆஜராகினர்.
சென்சார் போர்டு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல். சுந்தரேசன் வாதாடினார்.சென்சார் போர்டு தரப்பில் வாதிடுகையில்,“சினிமாட்டோகிராபி சட்டம் மற்றும் விதிகளின்படி 72 நிமிடங்களுக்கு மேல் நீளமுள்ள படங்களுக்கு இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் தணிக்கை வாரியத் தலைவருக்கே உள்ளது.
இந்த வழக்கில் சென்சார் போர்டு பதிலளிக்க தனி நீதிபதி போதிய அவகாசம் வழங்கவில்லை.ரூ.500 கோடி முதலீடு செய்துள்ளோம், படம் 9-ஆம் தேதி வெளியாக உள்ளது எனக் கூறி அவசர உத்தரவு கோர முடியாது. சான்றிதழ் வழங்குவது தொடர்பான இறுதி அதிகாரம் முழுமையாக சென்சார் போர்டுக்கே உண்டு.
மண்டல அலுவலகத்தில் உள்ள ஆய்வுக் குழுவின் பரிந்துரைகள் வாரியத்தை கட்டுப்படுத்தாது” என தெரிவித்தனர்.இதற்கு இடையில் நீதிபதிகள்,“இந்த படத்தை சட்டப்படி யார் யார் பார்த்தார்கள்? ஆய்வு செய்ய அதிகாரம் பெற்றவர்கள் யார்?” என கேள்வி எழுப்பினர்.
அதற்கு சென்சார் போர்டு தரப்பு,“படத்தை பார்த்து பரிந்துரை செய்ய ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவே முழுமையாக படத்தை ஆய்வு செய்துள்ளது” என பதிலளித்தது.இதையடுத்து தலைமை நீதிபதி,“மண்டல அலுவலர் படத்தை பார்த்தாரா?” என கேள்வி எழுப்பினார்.அதற்கு சென்சார் போர்டு தரப்பில்,“அவர் படத்தை பார்க்கவில்லை. குழுவே படத்தை பார்த்துள்ளது.
விதிகளின்படி, தணிக்கை வாரியமே நேரடியாக சான்றிதழ் பரிந்துரைக்கலாம் அல்லது படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பலாம்.‘ஜனநாயகன்’ படம் குறித்து புகார் வந்ததால் மறுஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. படத்தில் 14 காட்சிகளை நீக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு மீண்டும் பரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் 14 காட்சிகளை நீக்கிய பின்னரும் தயாரிப்பு நிறுவனம் உடனடி சான்றிதழ் கோரியது. கடந்த 6-ஆம் தேதியே இந்த படம் மறுஆய்வு குழுவுக்கு அனுப்பப்படும் என்பது தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரியும்.
ஆனாலும் அதை எதிர்த்து அவர்கள் அப்போது வழக்கு தொடரவில்லை” என விளக்கம் அளிக்கப்பட்டது.இந்த வழக்கு விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
English Summary
Censor Board versus Producer Sensational hearing jananayagan case