“அம்மா என்னை இன்னும் குழந்தையாகவே பார்க்கிறார்.. அப்பாதான் அதிக ஆதரவு” – விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உருக்கம்!
Mom still sees me as a child Dad is the one who is more supportive Vijay son Jason Sanjay opens up emotionally
நடிகர் விஜய் மற்றும் சங்கீதாவின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க, தமன் இசையமைத்துள்ளார். கடந்த மாதம் வெளியாக இருந்த இப்படம், விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் காரணமாக தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. இந்த மாதத்திற்குள் ‘சிக்மா’ திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஜேசன் சஞ்சய்யை சுற்றி சமீபகாலமாக பல்வேறு நேர்மறையான விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தனது தந்தை விஜய் தனக்கு அளித்த ஆதரவு குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி, இருவருக்கும் இடையே மனஸ்தாபம் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
விஜய் - சங்கீதா இடையேயான குடும்ப பிரச்சினை தொடர்பான பேச்சுகளிலும் ஜேசன் சஞ்சய்யின் பெயர் அடிக்கடி அடிபட்டது. ‘சிக்மா’ படத்தின் முதல் டீசரில் தனது தந்தையின் பெயரை இனிஷியலாக கூட பயன்படுத்தவில்லை என்ற சர்ச்சையும் எழுந்தது. பின்னர் வெளியான அப்டேட்டில் அந்த விவகாரம் சரிசெய்யப்பட்டது.
தொடர்ந்து படத்தின் பணிகளில் கவனம் செலுத்திய ஜேசன் சஞ்சய், தற்போது தனது முதல் படத்தை வெளியிடத் தயாராகி வருகிறார். இந்த சூழலில் அவர் அளித்துள்ள புதிய பேட்டியில் தனது தாய் மற்றும் தந்தை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
தனது தாய் சங்கீதா குறித்து பேசிய ஜேசன் சஞ்சய், “நான் இவ்வளவு வளர்ந்தாலும், என்னுடைய அம்மா இன்றும் என்னை ஒரு குழந்தையாகவே பார்க்கிறார். நான் வேலையில் பிஸியாக இருப்பதால் முன்புபோல் அவருடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து என்னுடைய நலம் குறித்து விசாரிப்பார். வேலையில் சோர்ந்து போகும்போதெல்லாம் என்னை உற்சாகப்படுத்துவார்.
சினிமா விஷயத்தில் எனது அம்மாவின் கருத்தையும் விமர்சனத்தையும் நான் மிகவும் மதிக்கிறேன். என்னுடைய புதிய படத்தை பார்த்துவிட்டு அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தனது தந்தை விஜய் குறித்து பேசிய அவர், சிறு வயதில் இருந்தே சினிமா தனக்கு பரிச்சயமான ஒன்றாக இருந்ததாக கூறினார்.
“எனது அப்பா சினிமா துறையைச் சேர்ந்தவர் என்பதால் எனக்கும் இயல்பாகவே சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது. வெளிநாட்டில் சினிமா தொடர்பாக படிக்க வேண்டும் என்று நான் அப்பாவிடம் சென்று கூறினேன். அவர் சிறிதும் தயங்காமல் உடனடியாக சம்மதம் தெரிவித்தார்.
எனது அம்மா, தங்கையைவிட அதிகமாக ஆதரவு கொடுத்தது அப்பாதான். சினிமாவில் பல்வேறு துறைகள் இருக்கின்றன. நீ சென்று படி. அப்போதுதான் உனக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும் என்று கூறி என்னை அனுப்பி வைத்தார்” என ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
தனது முதல் படமான ‘சிக்மா’ ரிலீஸை எதிர்நோக்கியுள்ள நேரத்தில், பெற்றோர் குறித்து ஜேசன் சஞ்சய் வெளிப்படையாக பேசியிருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, தந்தை விஜய் தனக்கு வழங்கிய ஆதரவு குறித்து அவர் கூறியுள்ள வார்த்தைகள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகின்றன.
English Summary
Mom still sees me as a child Dad is the one who is more supportive Vijay son Jason Sanjay opens up emotionally