பரமக்குடியில் பரபரப்பு...! ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி கலெக்டர் 'ரெட் ஹேண்ட்' ஆக கைது...!
There Paramakudi Assistant Collector arrested red handed accepting bribe 50 thousand
பரமக்குடியில் சவுடுமண் அள்ளுவதற்கான தடையில்லா சான்று வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் உதவி கலெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக கூறப்படும் அவரது கார் ஓட்டுநரையும் காவலர்கள் கைது செய்தனர்.மேலும், கைது செய்யப்பட்ட உதவி கலெக்டரின் பரமக்குடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடி, நயினார்கோவில், போகலூர் உள்ளிட்ட பகுதிகளில் சவுடுமண் அள்ளுவதற்கு அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விவசாயிகள் தேவையான மண்ணை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், அரசு அனுமதியுடன் அள்ளப்படும் மண்ணை சிலர் தனிநபர்களுக்கு விற்பனை செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையே, சவுடுமண் அள்ளுவதற்கான தடையில்லா சான்று பெறுவதற்காக ஒருவர் பரமக்குடி உதவி கலெக்டரும், வருவாய் கோட்டாட்சியருமான சரவண பெருமாளிடம் விண்ணப்பித்திருந்தார்.அனுமதி வழங்குவதற்காக சரவண பெருமாள் ரூ.50 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.
அரசு அலுவலகத்தில் முறையான அனுமதி பெறுவதற்காக லஞ்சம் வழங்க விரும்பாத அந்த நபர், இதுகுறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களிடம் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட காவலர்கள், ரசாயனப் பொடி தடவிய ரூ.50 ஆயிரம் பணத்தை புகார் அளித்த நபரிடம் கொடுத்து, அதனை உதவி கலெக்டரிடம் வழங்குமாறு அறிவுறுத்தினர்.காவலர்களின் திட்டப்படி, அந்த நபர் பரமக்குடி ஓட்டப்பாலம் அருகே உள்ள வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்புக்குச் சென்றார்.
அங்கு சரவண பெருமாளிடம் ரசாயனப் பொடி தடவிய ரூ.50 ஆயிரத்தை அவர் வழங்கினார்.அப்போது அருகில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் அதிரடியாக செயல்பட்டு, லஞ்சப் பணத்தை பெற்றதாக கூறப்படும் சரவண பெருமாளை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.இதைத்தொடர்ந்து சரவண பெருமாளிடம் காவலர்கள் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இந்த லஞ்சப் பரிவர்த்தனையில் இடைத்தரகராக அவரது கார் ஓட்டுநர் சுந்தர், 41, செயல்பட்டதாக தெரியவந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து சுந்தரிடமும் விசாரணை மேற்கொண்ட காவலர்கள், அவரையும் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சரவண பெருமாளின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூர் என தெரியவந்துள்ளது.இந்த நிலையில், பரமக்குடியில் அவர் தங்கியிருந்த வீட்டிலும் காவலர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.சவுடுமண் அள்ளுவதற்கான அனுமதி வழங்குவதற்காக ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக உதவி கலெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவமும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் கார் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டிருப்பதும் பரமக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
There Paramakudi Assistant Collector arrested red handed accepting bribe 50 thousand