நாளை தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் - வெளியான அறிவிப்பு!
AITUC Protest jan 24
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 24-ஆம் தேதி (நாளை) தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறும் என்று, ஏஐடியுசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, ஏஐடியுசி ம.இராதாகிருஷ்ணன் பொதுச்செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பில், "2023 ஜனவரி 24-ஆம் தேதி அன்று 240 நாட்கள் பணிபுரிந்தால் பணிநிரந்தரம், எந்தத் தொழிலில் பணிபுரிந்தாலும், ரூபாய் 21,000-க்கு குறையாத மாத ஊதியம், EPS 95 மற்றும் நலவாரியங்களில் மாதம் 6000/- ரூபாய்க்கு குறையாத ஓய்வூதியம்,

நலவாரியப் பதிவுகளை எளிமைப்படுத்தி தாமதம் இல்லாமல் நிதிப்பயன்களை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மோடி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளையும் நான்கு சட்டத் தொகுப்புகளையும் எதிர்த்தும் தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறும்.
அதன்படி சென்னையில் குறளகம் முன்பிருந்து காலை 10.00 மணிக்கு பேரணி புறப்பட்டு தொலைபேசி நிலையம் முன்பு தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி அவர்கள் தலைமையில் மறியல் நடைபெறும்.
திருப்பூரில் கே.சுப்பராயன் எம்.பி., நாகப்பட்டிணத்தில் எம்.செல்வராசு எம்.பி., கிருஷ்ணகிரியில் டி.ராமச்சந்திரன் எம்எல்ஏ, திருவாரூரில் க.மாரிமுத்து எம்எல்ஏ, திருச்சியில் தேசிய செயலாளர் வஹிதா நிஜாம், மதுரையில் மாநிலத் தலைவர் எஸ்.காசிவிஸ்வநாதன்,
செங்கல்பட்டில் பொதுச் செயலாளர் ம.இராதாகிருஷ்ணன், சேலத்தில் நா.பெரியசாமி எக்ஸ். எம்எல்ஏ, கோவையில் எம்.ஆறுமுகம் எக்ஸ். எம்எல்ஏ, மாநிலச் செயலாளர்கள் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் கே.இரவி, தஞ்சையில், எஸ்.சந்திரகுமார், ஆர்.தில்லைவனம்
திண்டுக்கல்லில் ஆர்.ஆறுமுகம், தருமபுரியில் எஸ்.சின்னச்சாமி, நெல்லையில் ஆர்.சடையப்பன், அவிநாசியில் என்.சேகர் ,திருவண்ணாமலையில் வி.ஆதிமூலம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏஐடியுசி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறும் இம்மறியல் போராட்டங்களில் தலைமை தாங்குகின்றனர்." என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.