தனது நகை, பொருட்களைக் கொடுத்து அதிமுகவை வலிமைப்படுத்தினார் ஜெயலலிதா – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!
ADMK Sengottaiyan JJ EPS
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க.வின் வரலாறு மற்றும் தற்போதைய நிலை குறித்துப் பேசினார்.
"அ.தி.மு.க. இயக்கம் என்பது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு மாபெரும் தலைவர்களால், பல்வேறு தியாகங்கள் மூலம் வளர்க்கப்பட்ட இயக்கம். ஆனால், பல நபர்கள் அவர்கள் செய்த தியாகத்தையும், நன்றியையும் மறந்துவிட்டுச் சென்றுவிட்டனர்," என்று அவர் குறிப்பிட்டார்.
ஜெயலலிதாவின் குணங்களைப் பற்றிப் பேசிய அவர், "ஜெயலலிதா மன்னிக்கும் தன்மை படைத்தவர். அவர் 1989-ல் தனது நகை, பொருட்களைக் கொடுத்து கட்சியை வலிமைப்படுத்தினார். உழைப்பவர்களை யாராலும் வீழ்த்த முடியாது," என்று உறுதியாகத் தெரிவித்தார். தான் ஜெயலலிதாவின் வழியில் தொடர்ந்து பயணித்து வருவதாகவும், தொண்டர்களைக் காக்கும் பணியைத் தொடர்ந்து செய்வோம் என்றும் கூறினார்.
மேலும், "விரைவில் நாங்கள் எதிர்கொள்ளும் அனைத்து சோதனைகளையும் சாதனைகளாக மாற்றுவோம். 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்ற அடிப்படையில், நான் கடந்த 45 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்காகப் பணியாற்றி வருகிறேன். நான் ஒரு இளவரசரைப் போல அல்லாமல், உங்கள் வீட்டுப் பிள்ளையாக எளிமையாகவே வாழ்ந்து வருகிறேன்," என்றார் செங்கோட்டையன்.